Health Tips For Weight Loss In Tamil: உடல் எடையை அதிகரிப்பதில் சாதம் (Rice) ஒரு முக்கிய பங்கை வகிக்கும். சாதத்தில் உள்ள அதிக கார்போஹைரேட் அளவு உடல் எடையை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. மேலும் சாதம் எளிமையாக செரிமானம் ஆகிவிடுவதால் ரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) உடனடியாக அதிகரிக்க வழிவகுக்கும். அதுவும் குறிப்பாக அதிகமாகவும், அதிக காலோரியையும் நீங்கள் சாதத்துடன் உட்கொள்ளும்போது இது நடக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை அரிசி என்பது பண்பாட்டோடு கலந்திருக்கிறது. ஏழை எளியவர்கள் முதல் பணக்காரர்கள் வரை அரிசி சாதத்தை விரும்பி உண்பவர்கள் இருக்கிறார்கள். அரிசியின் தரமும், விலையும், ருசியும் மாறபடலாம், ஆனால் அரிசி சாதம் மீதான காதலில் மாறப்பாடு இருக்காது. இருப்பினும் உடல் எடையை குறைப்பவர்கள் (Weight Loss) அரிசியை தவிர்க்கவே பார்ப்பார்கள். அது உடல் எடையை அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதால் அதனை மொத்தமாக தவிர்க்க நினைக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் சாதத்தை இந்த சில டிப்ஸ்களை பின்பற்றி சாப்பிட்டீர்கள் என்றால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்காது. நீங்கள் வாய்க்கு ருசியாக சாதமும் சாப்பிடலாம், உடல் எடை ஏறாமலும் பார்த்துக்கொள்ளலாம்.
1. சரியான அரிசியை தேர்வு செய்யுங்கள்
உடல் எடையை குறைக்க உதவும் அரிசியை தேர்வு செய்வது முக்கியமாகும். அதாவது, குறைந்த GI அளவு கொண்ட பாஸ்மதி போன்ற அரிசிகளை தேர்வு செய்யுங்கள். அதாவது அந்த அரிசி மெதுவாக செரிமானம் ஆக வேண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கும், இன்சுலின் சுரக்கும் அளவும் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் குறைவான கலோரி அளவை பராமரிக்க இவை சிறந்த பங்களிப்பை அளிக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் தேன், வெல்லம் சாப்பிடலாமா? என்ன ஆகும்?
2. புரதம் முக்கியம் பிகிலு
அரிசி சாதத்துடன் நீங்கள் நிச்சயம் புரதச்சத்து (Protein) நிறைந்த ஆகாரங்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அரிசி சாதத்துடன் புரதச்சத்தும் சேரும்போது வயிறு நிறையும் மற்றும் வளர்ச்சிதை மாற்றவும் உந்துதல் அடையும். சிக்கன், மீன், பருப்பு, டோஃபு, பன்னீர் உள்ளிட்ட புரதச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாதத்துடன் சேர்த்து எடுத்துக்கொள்ளவும். இதனால், கலோரி அதிகமாகாமலும் பார்த்துக்கொள்ளலாம், தசைகளை வளர்க்கவும் உதவும். இந்த சமச்சீரான உணவால் வயிறு நிறைந்து, தேவையில்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் குறையும், உடல் எடையும் வேகமாக குறையும்.
3. காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்
சாதத்தின் அளவை விட கூட்டு, பொரியல், பச்சடி ஆகியவற்றின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். காய்கறிகளை (Vegetables) அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஊட்டச்சத்தும் அதிகமாக கிடைக்கும். அதுவும் நார்ச்சத்து மிகுந்த கேரட், பீன்ஸ், கீரைகள் உள்ளிட்டவை உங்களின் வயிறையும் நிறைவாக வைத்திருக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமிண்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீராக வைக்க உதவும். சமச்சீராக காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் குறைவான கலோரியை எடுத்துக்கொள்வீர்கள். இது உடல் எடை குறைப்பில் மிகுந்த பயனளிக்கும்.
4. சாதத்தின் அளவை குறையுங்கள்
சாதத்தின் அளவை முன்னெப்போதும் உட்கொள்வதை விட சற்று குறைவாகவே சாப்பிடுங்கள். முடிந்தளவு சின்ன தட்டில் சாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மெதுவாக உண்ணுங்கள். அரை கப் அளவுக்கு சமைத்து சாப்பிடுங்கள். 100-150 கலோரி அளவிற்கு சாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். குறைவாக சாப்பிடுவதன் மூலம் குறைவான கலோரிகளை எடுத்துக்கொள்வீர்கள், தேவையில்லாமல் பசி எடுக்காது, உடல் எடையும் குறையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் உங்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது. இருப்பினும், இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ