கோடைக்காலத்தை விடுமுறையின் காலமாக, ஒளி வீசும் காலமாக, சுவையான மாங்காயின் காலமாக, கோடை மழையின் காலமாக நாம் நம் மனதில் நினைத்துப் பார்த்தாலும், கோடையில் கொளுத்தும் வெயிலையும், வாட்டும் வெப்பத்தையும் நாம் மறந்துவிட முடியாது.
கோடையில் நாம் நிம்மதியாக, உடல் ஆரோக்கியத்தோடு, வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பது கடினமான விஷயமல்ல. மிக எளிதாக கிடைக்கும் சில பொருட்களை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும், கோடைக்காலம் கொண்டாட்டம் மிகுந்த காலமாக மாறிவிடும்.
வெயிலோ மழையோ, தண்ணீர் என்பது நம் உடலுக்கு இன்றியமையாத ஒன்று. அதுவும் கோடைக்காலத்தில் சற்று அதிகமாகவே நீர் அருந்துவது நல்லது. தண்ணீரைத் தவிர வெயில் காலத்தில் தினமும் நீங்கள் உட்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் இதோ:
நீர் மோர்:
கோடைக்காலத்தில் (Summer) நீர்மோரை விட சிறந்த, எளிய பானத்தை நாம் காண முடியாது. உச்சி வெயில் காலத்தில் வீதிகளில் பந்தல் போட்டு சாலைகளில் செல்பவர்களுக்கு நீர்மோர் கொடுப்பது நம் மரபு. நீர்மோர் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. இது அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீர்மோரை தினமும் குடித்தால், அது அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், குடல் இயக்கம் எளிதாகி மலச்சிக்கல் காணாமல் போய்விடும். நீர் மோர் நம் உடலை, குறிப்பாக செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கிறது.மோரில் பலவகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், அதாவது பொட்டாசியம், வைட்டமின் பி போன்றவை உள்ளன. இது புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் இருக்கிறது. மோர் உடலில் வைட்டமின் குறைபாட்டை சமநிலைப்படுத்த ஏற்றது.
இளநீர்
இளநீர் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இது அற்புதமான குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் அதிகமான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளதால் வெயிலில் உடல் சோர்வை நீக்க இளநீர் பெரிய அளவில் உதவுகிறது. உடலில் நீர் சத்தை அதிகரிக்கவும், உடலை ஊட்டச்சத்துடன் வைத்திருக்கவும் இளநீர் உதவுகிறது.
தர்பூசணி
நீர்சத்து மிக அதிகமாக உள்ள பழம் தர்பூசணிப் பழம் (Watermelon). இவை நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றன. உடலுக்கு கனத்தன்மையை அளிக்காமல் தேவையான சத்தை மட்டும் கொடுக்க வல்லது தர்பூசணி. நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் அவதிப்படுபவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இதில் இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது.
வெள்ளரிக்காய்
சாலடில் பயன்படுத்தப்படும் இந்த காயில் நார்ச்சத்து மற்றும் நீர்சத்து நிறைந்துள்ளது. ஆகையால் இது உங்கள் உடலிலும் நீரின் அளவை அதிகரிக்கிறது. இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல தீர்வாகும். இதை அப்படியே தினமும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. லேசான உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாற்றுடனும் இதை உட்கொள்ளலாம்.
ALSO READ: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
புதினா
புதினா எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் மலிவான ஒரு மூலிகையாகும். இதை நீங்கள் சட்னியாக, ராய்தாவில், துவையலாக என்று பல வகைகளில் தயார் செய்து உண்ணலாம். புத்துணர்ச்சியூட்டும் பானங்களிலும் இதை சேர்க்கலாம். அதன் புத்துணர்ச்சி தரும் பண்பு மற்றும் குளிர்ச்சியான சுவை காரணமாக, இது கோடைல்கால உணவுத் தேவைகளில் பிரதானமாக கருதப்படுகின்றது.
வெங்காயம்
வெங்காயம் (Onion) ஆச்சரியப்படுத்தும் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. நமது உணவில் நாம் வெங்காயத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். வெங்காயம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வெங்காயம் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது.
எலுமிச்சை சாறு
அந்த காலம் முதல் இப்போது வரை வெயில் காலத்தில் உடனடி புத்துணர்ச்சிக்கு எலுமிச்சை (Lemon) சாறை அடித்துக்கொள்ள வேறு எந்த பானமும் இல்லை. அதில் உப்பு, சர்க்கரை, புதினா, சீரகம் என பலவற்றை சேர்த்து பல தினுசுகளில் பருகலாம். எப்படி குடித்தாலும் இது நம் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை மட்டுமே அளிக்கின்றது.
கோடை காலத்தில் உங்கள் தினசரி உணவுடன் மேற்கூறியவற்றையும் சேர்த்து கண்டிப்பாக உட்கொள்ளுங்கள். உங்கள் கோடைக்காலம் குதூகலமாக கழியட்டும்!!
ALSO READ: வெந்நீரின் அசத்தும் அற்புத நன்மைகள்: தண்ணீரால் ஆனந்தம், வெந்நீரால் பேரானந்தம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR