சிலிகோசிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெஹ்லோட் அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை திங்கள்கிழமை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மாநிலத்தில், 22 ஆயிரம் சிலிகோசிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடுகையில்., சிலிகோசிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். சிலிக்கோசிஸ் கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் ராஜஸ்தான். இந்தக் கொள்கை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தப்பட்டது. பாலிசி படி, பாதிக்கப்பட்டவருக்கு மொத்தமாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். இப்போது ஓய்வூதியத்திற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் திணைக்களம் பிறப்பித்த உத்தரவில், ஓய்வூதியத்திற்கான தகுதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்டவர் ராஜஸ்தானில் வசிப்பவராக இருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தானில் பணிபுரியும் போது சிலிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களின் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையினை பெற, பாதிக்கப்பட்டவர்கள் சிலிகோசிஸ் நோயால் பாதிக்க சான்றிதழினை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியிடன் பெற்று அரசிடம் சமர்பிக்க வேண்டும்.
இதுதவிர சிலிகோசிஸால் பாதிக்கப்பட்ட நபர் பிற சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு தகுதியுடையவர் என்றால், அவர் அந்த வகையில் ஓய்வூதியம் பெறுவார். சிலிகோசிஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓய்வூதியத்தை வழங்குவதற்கான வருமான வரம்பை கட்டாயப்படுத்த முடியாது. சிலிகோசிஸ் பாதிக்கப்பட்டவரின் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் ஓய்வூதியம் தானாக அங்கீகரிக்கப்படும் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலிகோசிஸ் என்பது ஒரு நுரையீரல் நோய் ஆகும். சிலிக்காவைக் கொண்டிருக்கும் தூசியை சுவாசிக்கும் வேலைகளில் இந்த நோய் பரவுவதாக கூறப்படுகிறது. இது மணல், பாறை அல்லது குவார்ட்ஸ் போன்ற கனிம தாதுக்களில் காணப்படும் ஒரு சிறிய படிகமாகும்.
2011-ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தானில் 1,600-க்கும் மேற்பட்டோர் சிலிகோசிஸால் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கர நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசாங்கம் அடையாளம் காணத் தொடங்கி, மறுவாழ்வு பெறும் வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் மொத்தம் சிலிகோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 11,000-மாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் அரசு நோய் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்தும் கொள்கை கவனம் செலுத்தி வருகிறது.