உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தார் அமைச்சர்

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை துவக்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 10, 2018, 10:03 AM IST
உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தார் அமைச்சர் title=

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை துவக்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர்.

இன்று (09.05.2018) சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருயது கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையம், உணவு பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியாதாவது:-

மாண்புமிகு அம்மாவின் அரசில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பான தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய நுகர்வோர்களுடனும், உணவு வணிகர்களுடனும் இணையது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி வருகிறது. விடுமுறை காலமான மே மாதத்தில் பெருமளவு மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். 

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் உணவு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. சென்னையில் உள்ள 5 சுற்றுலா இடங்களையும் சேர்த்து தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் இன்று முதல் செயல்படும். சுற்றுலா தலங்களில் உள்ள அனைத்து உணவு வணிகர்களையும் உணவு பாதுகாப்புத் துறையின் பதிவு பெறச் செய்து, பொது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்குவதை உணவு பாதுகாப்பு மையம் உறுதிசெய்யும். 

சென்னையில், மெரினா கடற்கரை, எலியாட்ஸ் கடற்கரை, இராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் தியாகராயர் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் செயல்படும். உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் வாகனங்களை உணவு பாதுகாப்புத் துறை வடிவமைத்துள்ளது. 

தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வும், “கோடைக்காலத்தில் பாதுகாப்பான உணவு” குறித்து பிரசுரங்களையும் விநியோகம் செய்வர். உணவு பாதுகாப்பு வாகனங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பான உணவு, உணவு கலப்படம், தரமற்ற உணவு, தவறான குறியீடு உள்ள உணவு மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

சுற்றுலா தலங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையம் அமைக்கப்படும். இதில் பொது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருவோர உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம், பழச்சாறு, குளிர்பானக் கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களின் விபரச் சீட்டில் கவனிக்க வேண்டிய விவரங்கள் கொண்ட பலகைகள் காட்சிக்கு வைக்கப்படும். மேலும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உணவில் கலப்படங்கள் கண்டறிய விரைவு சோதனைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் செய்வார்கள். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் திரு. வி. அன்புச்செல்வன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இன்பசேகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (இ.எஸ்.ஐ) மரு. மோகனன், உணவு பாதுகாப்பு மற்றும் மருயது கட்டுப்பாட்டு துறை கூடுதல் இயக்குநர் மரு வனஜா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Trending News