ஆளுமைகளாய் தோன்றி வாக்கு சேகரிக்கும் கலைஞர்களின் மறக்கப்படும் உண்மை முகங்கள்

ஆளுமைகளும், பிரபலங்களும் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரசியல் களத்தில், தோற்றமும் உருவமும்தான் எல்லாம்!! சில நேரங்களில் பிரபலங்களின் சாயல்களுக்கும் புகழின் சாரல் அடிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2021, 01:26 PM IST
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடக்கவுள்ளது.
  • தேர்தல் பிரச்சாரத்தில் பெருந்தலைவர்களை ஒத்த உருவமுள்ள கலைஞர்கள் வாக்கு சேகரிக்க வெகுவாக உதவுகிறார்கள்.
  • தேர்தல் முடிந்தவுடன் இவர்களது நிலை என்ன? வாழ்வாதாரம் என்ன?
ஆளுமைகளாய் தோன்றி வாக்கு சேகரிக்கும் கலைஞர்களின் மறக்கப்படும் உண்மை முகங்கள்  title=

ஆளுமைகளும், பிரபலங்களும் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரசியல் களத்தில், தோற்றமும் உருவமும்தான் எல்லாம்!! சில நேரங்களில் பிரபலங்களின் சாயல்களுக்கும் புகழின் சாரல் அடிக்கிறது. பல ஆண்டுகளாக, தேர்தல் நேரங்களில், பிரச்சார மேடைகளில், நடிகர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் தோற்றமுடைய கலைஞர்களை மேடையேற்றி அதன் மூலம் மக்களை ஈர்ப்பதை அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. பெரிய அரசியல் தலைவர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் அச்சு அசலாக ஒத்திருக்கும் இந்த கலைஞர்கள், மேடையில் பாடி, ஆடி, வசனம் பேசி, பிரபலங்களைப் போன்ற செய்கைகளை செய்து, வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு உதவுகிறார்கள். 

அலங்காரப் பொருட்கள், கச்சிதமான ஆடைகள் ஆகியவற்றின் உதவியோடு இந்த கலைஞர்கள் பெருந்தலைவர்களாக மாறி விடுகிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கலைஞர் கருணாநிதியும் செல்வி ஜெயலலிதாவும் இல்லாத முதல் தேர்தல் இந்த தேர்தல் என்பதால், இவர்களை ஒத்த உருவம் கொண்ட கலைஞர்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. 

"தலைவர்களை ஒத்த உருவமுள்ளவர்களை பார்ப்பது, அவர்கள் பேசுவதைக் கேட்பது, கண்டிப்பாக வாக்காளர்களின் (Voters) மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெருந்தலைவர்கள் தற்போது நம்மிடையில் இல்லாத நிலையில், அவர்களை ஒத்த உருவம் உள்ளவர்களை பார்ப்பது மக்களுக்கு உணர்சிகளைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது. இது மூத்த வாக்காளர்களிடையே பழைய காலத்தின் நினைவுகளை மீண்டும் எழுப்புகிறது ”என்கிறார் மதுரையில் வசிக்கும் ஜீது.

பெரும்பாலும் மாலை நேரங்களில் வேலை செய்யும் இந்த கலைஞர்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். சில கலைஞர்கள் பல வேடங்களில் நடிக்கும் திறன் படைத்தவர்களாகவும் உள்ளார்கள். இருப்பினும், அரசியலின் மாறிவரும் தன்மை மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள், பிரத்யேக இலக்கு விளம்பரங்கள் ஆகியவை அவர்களது தொழிலை கணிசமாக பாதித்துள்ளது.

ALSO READ: வாக்காளர் பெருமக்களே!! இது கொரோனா காலத்து தேர்தல், அதை நினைவில் கொள்ளவும்!!

சினி ஸ்டார் அபினயா என்ற ஒரு குழு சுமார் 20 கலைஞர்களைக் கொண்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், விஜய் மற்றும் பல ஆளுமைகளாக இந்த குழுவின் கலைஞர்கள் வேடமிட்டு பிரச்சாரம் செயிறார்கள். எம்.ஜி.ஆருக்கே உரித்தான கண்ணாடி, வெள்ளை தொப்பி, சட்டைகள் என எம்.ஜி.ஆராகவே வாழ்ந்து மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் கலைஞர்களும் பலர் உள்ளனர். 

தேர்தல் களம் உச்சத்தில் உள்ள தருணங்களில், ஒரு முறை நடிப்பதற்கு ஒரு கலைஞருக்கு ரூ .2000 வரை கிடைப்பதுண்டு. ஆனால் ஒரு பத்து ஆண்டுகள் முந்தைய காலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், இப்போது வேலை பற்றாக்குறை அதிகமாகி விட்டது என அவர்கள் கூறுகிறார்கள். "தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த பிறகு, எங்களில் சிலர் ஆட்டோ ஓட்ட சென்று விடுகிறார்கள். சிலர் சிறு கடைகளை வைத்துள்ளார்கள். எனினும், சிலர் முழு நேர கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். " என்று சினி ஸ்டார் அபினாயாவின் இயக்குனர் சாரா கூறுகிறார். இந்த தொழிலில் ஈடுபடும்போது, சில சமயங்களில் மாலை நேரம் நீண்ட நேரத்திற்கு வேலை இருப்பதாலும், சில சமயம் நள்ளிரவிலேயே இரவு உணவை உண்ணக்கூடிய அளவு வேலை அதிகமாக இருப்பதாலும், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சிலரால் இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடிவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார். இதில் ஈடுபடுபவர்களின் உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்கிறது என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் பலர். 

ரஜினிகாந்த் மற்றும் எம்.கே.ஸ்டாலின் (MK Stalin) வேடத்தில் நடிக்கும் ஈஸ்வரனுக்கு வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லை. அவர் முழுநேர நடிகராக உள்ளார். "தேர்தல் பிரச்சாரமில்லாத பருவத்தில் நான் கோவில் திருவிழாக்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். என்னால் பாடவும் முடியும் என்பதால், அது எனக்கு ஒரு கூடுதல் நன்மையாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

அவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சி முறையைப் பற்றி கேட்டபோது, ​​கலைஞர்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதும், தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வதும் இன்றியமையாதவையாக உள்ளன என்று கலைஞர்கள் கூறினர். அவர்கள் யாரைப் போல் வேடமிட்டு மேடையேறுகிறார்களோ, அவர்களைப் போலவே எப்போதும் தங்களது தோற்றமும் உடல் வாகும் இருக்க, இந்த கலைஞர்கள் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. 

அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பங்களைப் பற்றி பேசுகையில், தேர்தல் நேரத்தில் தங்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும், ஆனால் அதன் பிறகு வருமானத்திற்கான வழிகள் தடைபட்டுப் போவதாகவும் கலைஞர்கள் கூறுகிறார்கள். 

தேர்தல் (Election) காலங்களில் தங்களை வருந்தி வருந்தி அழைக்கும் அரசியல் கட்சிகள், தேர்தல் முடிந்தவுடன் தங்களைக் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களது மிகப்பெரிய குறையாக உள்ளது. 

“வாக்கு கேட்கும் போது, பிரபலங்களைப் போல வேடமிட்டு, மேடையில், பாடி, ஆடி, வசனம் பேசும்போது, எங்கள் கவலைகளெல்லாம் மறைந்து விடுகின்றன. ஆனால், பிறகு நாடகம் முடிந்து நிஜ வாழ்க்கையை நாங்கள் எதிர்கொள்ளும்போது நிதர்சனம் தீயாய் சுடுகிறது” என்று பரிதாபமாகக் கூறுகிறார் சாரா.

ALSO READ: திமுக-வை வீழ்த்த, தொண்டை மட்டுமல்ல, என் உயிரையும் கொடுப்பேன்: சிவகங்கையில் முதல்வர் பழனிசாமி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News