தென் சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் டெப்பாசிட் இழக்கும் நிலையில் உள்ளார்!
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
நடைப்பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்குள் தேர்தல் முடிவு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது எனவும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் செயல்பட்ட அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை கண்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை தன்வசமாக்கியுள்ளது.
இதற்கிடையில் தென் சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் தற்போது வரை வெறும் 477 வாக்குகள் மட்டுமே பெற்று டெப்பாசிக் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இத்தொகுதியில் இவரை விடவும் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் (12545) வாக்குகள் கிடைத்துள்ளது.