’நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன்’: நரேந்திர மோடி!

யார் சேவை செய்வார்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்து எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என மோடி பெருமிதம்!!

Last Updated : May 25, 2019, 09:44 PM IST
’நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன்’: நரேந்திர மோடி! title=

யார் சேவை செய்வார்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்து எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என மோடி பெருமிதம்!!

நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய புதிய விஷயங்களும் சாதனைகளும் நடைபெற்றுள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு தனிப் பெரும் கட்சியாகப் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை தேசிய கட்சிகள் நுழையாத சில மாநிலங்களிலும் பா.ஜ.க நுழைந்துள்ளது. அதே போன்று சில மாநிலக் கட்சிகளும் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காகப் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்கப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர். அதேபோல் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் சோஷி உள்ளிட்டோருடன், தமிழக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். 

இதை தொடர்ந்து, கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக மோடியின் பெயரை பரிந்துரை செய்து ஒருமனதாக தேர்வும் செய்தனர். இதை தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில்; யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக  25 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. 

புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம் மாற்றுவோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன். அனைவரின் ஆலோசனைகளை கேட்டறிந்து புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது. புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வரலாற்று வெற்றியை கொடுத்துள்ளனர். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இது பெண்களின் சக்தியால் சாத்தியமானது" என அவர் தெரிவித்தார்.

 

Trending News