தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் என மொத்தம் 9 கட்சிகள் கலந்துக்கொண்டனர்.
இதை தொடர்ந்து, தனது முதல்நாள் பயணமான “காவிரி உரிமை மீட்பு பயணம்” முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான பயணம் ஏப்ரல் 7-ம் தேதி நடை பெற்றது. இரண்டாவது நாளாக தஞ்சையில் இருந்து புறப்பட்டார்.
இதை தொடர்ந்து, தனது நான்காவது நாள் காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருவாரூரில் நேற்று துவங்கினர்.
திருவாரூரில் விவசாயிகள் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல் அரிய லூரில் இருந்து மற்றொரு பயணமும் தொடங்கியுள்ளது. இந்த இரு பயணக்குழுவும் வருகிற 12-ந் தேதி கடலூரில் சங்கமிக்கின்றோம். அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதனை தொடர்ந்து 13-ந் தேதி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சென்னை செல்கிறோம். சென்னை ராஜ் பவனில் கவர்னரை நேரில் சந்திக்க உள்ளோம். இதற்காக காலை 12.30 மணிக்கு கவர்னர் நேரம் தந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
அப்போது காவிரி நீர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கான காரணம் குறித்து எடுத்து சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திட உள்ளோம்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் மே மாதம் 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் உரிய பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என்றார்.