#CauveryIssue: வரும் 23-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம்! ஸ்டாலின்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 23-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Last Updated : Apr 18, 2018, 12:31 PM IST
#CauveryIssue: வரும் 23-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம்! ஸ்டாலின்!! title=

காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவ கண்காட்சியை துவக்கிவைக்க, ஏப்., 12ல் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தின.

இதையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை மாலை அனைத்துக் கட்சி கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. 

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அவர் கூறியது:

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு மத்திய அரசால் 2013 பிப்ரவரி 19-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு முழுமையான தகுதி வந்து விடுகிறது என்று மாநிலங்களுக்கு இடையிலான 1956-ஆம் ஆண்டு நதி நீர் தாவா சட்டப் பிரிவு 6 (2) மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. 

நடுவர் மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக, தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 14.75 டி.எம்.சி. தண்ணீர் அளவைக் குறைத்ததுடன், அத்தீர்ப்பில் இடம் பெற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் சொல்லாமல், பொதுப்படையாக 'ஸ்கீம்' (செயல் திட்டம்) உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது தமிழகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனைக் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு என்ற வகையில், அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதன்படி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரும் 23-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஸ்டாலின் மனு அளித்தனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச, ஏற்பாடு செய்கிறேன்' என, ஸ்டாலினிடம் கவர்னர் உறுதி அளித்தார் என்பதையும் அவர் சுட்டிகாட்டினர்.

Trending News