தீபங்களின் திருநாள் தீபாவளி இந்தியாவில் பாரம்பரியமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகிவிட்டன. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன, பிரம்மாண்டமான தீபாவளியை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மலைக்க வைக்கின்றன. இந்த தீபாவளியன்று புதிய உலக சாதனை படைக்கப்படும்.
அயோத்தி: அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆண்டாண்டுகால ஆவல் நிறைவேறும் நாளும் வந்துவிட்டது. அதற்கு அச்சாணியாக ஆலய கட்டுமானத்திற்கான பூமி பூஜையும் போடப்பட்டு, பணிகள் தொடங்கிவிட்டன.
தீபாவளி திருநாளுக்கு பலவிதமான பின்னணிகள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று ராமர் அயோத்திக்கு வந்த நாள் தீபாவளி. இந்த நிலையில், நவீன காலத்தில் பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு ராமரின் ஜன்ம பூமியில் அவருக்கு கோவில் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டதால், இந்த ஆண்டு தீபாவளி மனம் நிறைந்த தீபாவளியாக, ராம் லல்லாவை வரவேற்கும் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தீபங்களை வரிசையாக ஏற்றிக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு அயோத்தி தயாராகிவிட்டது.
நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. புதிய சாதனை உருவாக்கும் முயற்சியில் அனைவரும் மும்முரமாக இருக்கின்றனர். நவம்பர் 11 முதல் தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
Ram Ki Paidi என்ற பகுதியில் லட்சக்கணக்கான தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும் நிகழ்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும். ராம் ஜனமபூமி வளாகத்தில் முதல் முறையாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் பட்டொளி வீசும். Ram Ki Paidi பகுதியில் ஐந்தரை லட்சம் விளக்குகளை ஏற்றி புதிய உலக சாதனையை உருவாக்கும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக அயோத்தியின் எல்லைகள் நவம்பர் 11 முதல் சீல் வைக்கப்பட்டுள்ளன.
பகவான் ராமர் ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வருவார்
நவம்பர் 13 ஆம் தேதியன்று ஸ்ரீராமர், லக்ஷ்மணன் மற்றும் சீதையை புஷ்பக் ஹெலிகாப்டரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அழைத்துக் கொண்டு வருவார். ராம-லட்சுமண-சீதா சகிதமாக புஷ்பக விமானம் மூலம் மாநில முதலமைச்சர் ராம் கதா பூங்காவில் வந்திறங்குவார். பாரத நல்லிணக்கத்தின் ஒரு திட்டமாக அந்த நிகழ்வு நடைபெறும். அங்கு ஸ்ரீராமருக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.
தீப ஒளி நிகழ்ச்சியில் 11 பகுதிகள்
தீப ஒளி நிகழ்ச்சி 11 பகுதிகளாக நடைபெறும். பகவான் ராமரின் பிறப்பு முதல் இலங்கை தகனம் வரையில் வரிசைக் கிரமமாக ராமாயண நிகழ்வு நடத்திக் காட்டப்படும். இதில் அகலிகை சாப விமோசன அத்தியாயம் உள்ள பகுதி பெண்கள் அதிகாரம் பெறும் பகுதியாக சித்தரிக்கப்படுகிறது. இரண்டாவதாக, இலங்கையை அனுமார் எரிக்கும் இலங்கை தகன சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது, கிரிமினல்களுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதிகாசங்களை இன்றைய வரலாறாக நவீன பாணியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முயற்சியாக பண்டிகைகளும், வைபவங்களும் புதுப் பரிணாமம் பெற்று வருவது ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்றே சொல்லலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR