மும்பை: மகாராஷ்டிர மாநிலம், யவாட்டமல் மாவட்டத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியாகினர்!
விபத்துக்குள்ளான காரில் பயணித்தவர்கள் புனித யாத்திரையாக நந்தேத் பகுதியின் சச்காந்த் குருத்வாரா பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
பலியானர்கள் டெல்லி, ஹரியானா மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஒன்றிணைந்து புனித யாத்திரை சென்றதாக தெரிகிறது. இன்று விடியற்காலை ஏற்பட்ட இந்த விபத்தில் பலியான இவர்கள் அனைவரும் நாக்பூரில் நடைப்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து சச்காந்த் குருத்வாராவிற்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு பயணித்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில்... "இன்று காலை சுமார் 4 மணியளவில் சம்பந்தப்பட்ட வாகனம் கஷ்தோனி கேட் பகுதியினை கடக்க முயற்சிக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒரு பெண்மனி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் வழியில் இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் இருக்கும் மருத்தவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பின்னர் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரிலேயே காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.