மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா: வெற்றி ரகசியம் பகிர்கிறார் தாய் ஹெர்பல்ஸ் அர்ச்சனா

அர்ச்சனா கார்த்திகேயன் தன் வெற்றி அனுபவத்தை  ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடக்கும்  “அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா” -வில் பகிர்ந்து கொள்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2024, 12:23 PM IST
  • மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா.
  • ஏராளமான வேளாண் வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
  • இல்லத்தரசிகளும் வேளாண் சார் தொழிலில் வெல்லலாம் என்பதை சாதித்துக்காட்டிய தாய் ஹெர்பல்ஸ் அர்ச்சனா.
மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா: வெற்றி ரகசியம் பகிர்கிறார் தாய் ஹெர்பல்ஸ் அர்ச்சனா title=

மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா: இல்லத்தரசிகளும் வேளாண் சார் தொழிலில் வெல்லலாம்!

ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்திற்கான வாழ்க்கை திருமணத்திற்கு பின் பாதி முடிந்தது, குழந்தை பிறந்த பின் மொத்தமும் முடிந்தது என்று கிண்டலாக சொல்லக் கேட்டு இருப்போம். ஆனால் ‘தாய் ஹெர்பல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் அர்ச்சனா கார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய தொழிலை துவங்கிய சூழலை கேட்டால் அது நம்மை பிரமிக்க வைக்கிறது. அவரின் முயற்சியும், அதில் அவர் அடைந்த வெற்றியும் குடும்ப பொறுப்புகளை ஏற்று இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய பாதைக்கான கதவுகளை திறந்துவிடும்.

அர்ச்சனா தன் வெற்றிப் பயணம் குறித்து உற்சாகமாக பேசத் துவங்கினார், "என்னுடைய ஊர், கரூர். பள்ளி மற்றும் கல்லூரியில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற போதும் CA தேர்வுகளில் தொடர் தோல்விகளை சந்தித்தேன். ஆனாலும் என் தந்தை மிகவும் ஆதரவாகவே இருந்தார். இந்த நேரத்தில் எனக்கு திருமணம் ஆனது. என் கணவரும் என்னை மிகவும் வசதியாகவே வைத்துக் கொண்டார். ஒரு சராசரி வீட்டுப் பெண்களை போன்றே என் நாட்களும் கடந்து சென்று கொண்டு இருந்தது. 

என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் அதுவரையில் நான் பார்த்தது இல்லை. அந்த அளவிற்கு என்னுடைய தந்தையும், கணவரும் என்னை கவனித்துக் கொண்டனர். ஆனால் நான் கருவுற்று இருந்த போது என் தந்தைக்கு உடல்நிலை மோசமானது. அவரின் மருத்துவ செலவுக்கு எங்களிடம் இருந்த அனைத்தும் செலவானது. அப்பாவின் திடீர் உடல்நலக்குறைவு தந்த அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்தினால் எனக்கு 8 மாதங்களிலேயே குழந்தை பிறந்தது. அப்பாவை குணமாக்க நாங்கள் செய்த முயற்சிகளுக்கு பலன் ஏதும் இல்லாமல் அவர் இறந்து போனார்.  

இந்த சூழ்நிலையில் என் குடும்பத்தையும் சேர்த்து என் கணவரால் கவனித்துக் கொள்ள முடியும் என்றாலும் நான் அதை விரும்பவில்லை. மேலும் சுற்றி இருந்த சிலரின் ஏளனப் பேச்சும், என் குடும்பத்திற்கு ஒரு வருவாய் மூலத்தை உருவாக்க வேண்டிய கட்டாயமும் சேர்ந்து எனக்குள் ஒரு உந்து சக்தியை கொடுத்தது. அந்த தருணம் தான் நான் தொழில் துவங்க காரணமாக இருந்தது.  

மூலதனம் ஏதுவுமில்லை, கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி தொழில் செய்ய முடியும் என்றெல்லாம் பல்வேறு சிக்கல்கள் குறித்துப் பலர் பேசினர். ஆனால் அது எதுவும் எனக்கு சிக்கல்களாக தெரியவில்லை. தரை துடைக்க பயன்படும் சுத்திகரிப்பு திரவத்தினை வீட்டின் கழிவுகளை கொண்டே இயற்கை முறையில் தயாரித்து வந்தேன். மேலும் குளியல் பொடி, பொடுகு தொல்லை நீங்க என் பாட்டி சொல்லிக் கொடுத்த மூலிகை எண்ணெய் போன்ற என் வீட்டுத் தேவைக்கான பொருட்களை நானே தயாரித்து பயன்படுத்தி வந்தேன். அதனால் அதையே முதலில் விற்க திட்டமிட்டுத் தொழிலை துவங்கினேன்.

இந்த தொழிலுக்குத் தேவையான ஜிஎஸ்டி முதல் டிரேட் மார்க் வரை அனைத்தையும் நானே பதிவு செய்தேன்.  CA படித்த அனுபவம் கைக்கொடுத்தது. என்னுடைய தயாரிப்புகளை முதலில் என்னை சுற்றி இருந்தவர்களிடம் விற்கத் துவங்கினேன் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எங்களின் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.  மேலும் 2, 3 பொருட்களுடன் துவங்கிய தாய் ஹெர்பல்ஸ் மூலம் தற்போது 80-க்கும் மேலானப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். 

பொருட்களை சந்தைப்படுத்த நான் சமூக வலைத்தளங்களையே முழுமையாகப் பயன்படுத்தினேன். இன்று என்னுடைய வருமானம் ஜீரோவிலிருந்து ஆறு டிஜிட்டுகளில் உயர்ந்து இருக்கிறது. எங்களிடம் மாட்டுப் பண்ணை இருக்கிறது, அதனால் சமீபத்தில் மாட்டு பாலினைக் கொண்டு சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பது குறித்து தொடர் தேடல்கள், பயிற்சிகள் மற்றும் ஆய்வுகள் மூலம் கற்றுக் கொண்டேன். தற்போது பால் மற்றும் நெய்யினைக் கொண்டு ஷாம்பூ, லிப் பாம், கண்டிஷ்னர், மாய்ஸ்சரைஸர் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். 

மேலும் படிக்க | ஈஷாவின் உணவுக்காடு வளர்ப்பு மிக முக்கியமான முன்னெடுப்பு: காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் சித்த மருத்துவர் கு. சிவராமன் புகழாரம்!

சிறு வயது முதலே பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அப்பா கூறியது முதல் ரசாயனங்களால் எவ்வாறு நீர்நிலைகள் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன என்பதை நான் தெரிந்து கொண்டது வரை பல்வேறு தருணங்கள் ராசாயணம் இல்லாதப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்  என்று எனக்குள் தோன்றியுள்ளது. அதுவே என் வீட்டுத் தேவைக்களுக்காவும், என் குழந்தைக்கு ஒரு தாயாகவும் ராசயணம் இல்லாத பொருட்களை அளிக்க நினைத்து நான் தயாரிக்க துவங்கிய பொருட்கள் இன்று தாய் ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி வெற்றிப் பெறவும் அடிப்படையாக இருந்துள்ளது." என அவர் கூறி முடிக்கும் போது ஒரு சாதனையாளரின் தெளிவும், தீர்க்கமும் அவரின் பேச்சில் வெளிப்பட்டத்தை கவனிக்க முடிந்தது

அர்ச்சனா கார்த்திகேயன் தன் வெற்றி அனுபவத்தை  ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடக்கும்  “அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா” -வில் பகிர்ந்து கொள்கிறார். 

மேலும் இதில் ஏராளமான வேளாண் வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுவது, பிராண்டிங், மார்க்கெட்டிங், ஏற்றுமதி செய்வது மற்றும் இதற்காக அரசு வழங்கும் உதவி திட்டங்கள் என்னென்ன என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் பற்றி இதில் பேச இருக்கிறார்கள். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ‘தமிழ் தெம்பு’ திருவிழாவால் விழா கோலம் பூண்ட ஈஷா: 17-ம் தேதி ரேக்ளா பந்தயமும் நடைபெறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News