Uzhavar Pathukappu Thittam | தமிழ்நாடு அரசு உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உழவர் பாதுகாப்பு திட்டம் (Uzhavar Pathukappu Thittam) மூலம் கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை பெறலாம் என்பதால், இந்த திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்பு அட்டை பெறாதவர்களுக்கு தமிழ்நாடுஅரசு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக உழவர் பாதுகாப்பு திட்டம் (Uzhavar Pathukappu Thittam) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு முறைப்படி விண்ணப்பித்து உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருந்தால் திருமண உதவித் தொகை ஆண்களுக்கு 8 ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெற முடியும். இயற்கை மரணச் செலவு 20 ஆயிரம் ரூபாய் வாங்கலாம்.
இதுதவிர விபத்து ஏற்பட்டால் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெற முடியும். இதுதவிர மாதாந்திர ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நிதியுவியையும் இந்த திட்டத்தின் கீழ் பெற முடியும்.
பல நன்மைகளை கொண்டிருக்கும் உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பித்து உறுப்பினர் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இதுவரை உழவர் பாதுகாப்பு அட்டை பெறாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், வண்டலூர்(தாம்பரம், பல்லாவரம் வட்டம் நீங்கலாக)ஆகிய வட்டங்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குறு சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011 -ன் கீழ்உழவர் பாதுகாப்பு அட்டை மற்றும் உறுப்பினர்களாக பதிவு பதிவு செய்யப்பட்டவர்கள் இத்திட்டத்தில் பயன் அடையலாம்.
இத்திட்டத்தில் கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பெறுகின்றன. அதாவது, கல்வி உதவித்தொகை - தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பிற்கேற்ப நிதியுதவி வழங்கப்படும். திருமண உதவித்தொகை - ஆண்களுக்கு ரூ.8,000/- பெண்களுக்கு ரூ.10,000/-வழங்கப்படும்.
இயற்கை மரண உதவித்தொகை (ஈமச்சடங்கு செலவு (SC& ST ரூ.2,500/-)) உறுப்பினர்களுக்கு - ரூ.20,000/-, விபத்து நிவாரணம் - ரூ.1,00,000/- உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்பவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தற்காலிக உடல் திறனற்ற காலத்திற்கான மாதாந்திர உதவித்தொகை - ரூ.1.000/-, அதாவது காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ், டயாலிசிஸ், இதய நோய், கல்லீரல் நோய், மனநல பாதிப்பு, இரத்த உறையா நோய், முதுகு தண்டுவட பாதிப்பு. HIV யால் உயிரிழந்த மூல உறுப்பினரின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான உதவித்தொகை பெற முடியும்.
முதியோர் ஓய்வூதியம்-ரூ1.200/- பெறலாம். இத்திட்டத்தின் கீழ் உழவர் அட்டை வைத்துள்ள பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரிடம் மனு அளித்து பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல் அந்தந்த மாவட்டத்துக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மேற்கண்ட நிதியுதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.