ஆண் வேடம் அணிந்து வெளியே செல்லும் பெண்கள்: ஆப்கானிஸ்தானில் அவல நிலை

'எனது மகளை தாலிபான்களிடம் ஒப்படைக்கும்படி எனது முன்னாள் கணவர் கூறினார். எனக்கும் இரண்டாவது திருமணம் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது.....' தாலிபான் பிடியில் சிக்கலில் ஆப்கான் பெண்கள்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 29, 2022, 11:40 AM IST
  • தாலிபான்களின் ஆட்சியில் ஆப்கான் பெண்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.
  • வீட்டை விட்டு வெளியே செல்லவும் ஆப்கான் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • விவாகரத்தான, அல்லது தனியாக வாழும் பெண்களுக்கு சிரமங்கள் அதிகரிதுள்ளன.
ஆண் வேடம் அணிந்து வெளியே செல்லும் பெண்கள்: ஆப்கானிஸ்தானில் அவல நிலை title=

காபூல்: தாலிபான்களின் ஆட்சியில் ஆப்கான் பெண்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. அவர்கள் மீது பல வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே செல்லவும் ஆப்கான் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 

அங்கே, பெண்கள் வெளியே செல்வது அவசியம் என்றால், அவர்களுடன் ஒரு ஆண் இருப்பதும் அவசியமாகும். இந்த சூழ்நிலையில், விவாகரத்தான, அல்லது தனியாக வாழும் பெண்களுக்கு சிரமங்கள் அதிகரிதுள்ளன. இந்த பெண்கள் இப்போது ஆண்களைப் போல உடை அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். இப்படி செய்து தங்களை பெண் என யாரும் அடையாளம் காண முடியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

'வெளியே தெரிந்தால், மரணம் நிச்சயம்'

ஐக்கிய அரபு அமீரகத்தின் இணையதளமான 'தி நேஷனல்', விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் கதையை கூறியுள்ளது. இவர் ஆணாக வாழ வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். இந்த பெண் தாலிபான்களுக்கு பயந்து தனது உண்மையான பெயரை வெளியிடவில்லை. மாறாக பிரபல எழுத்தாளர் ரபியா பால்கியின் பெயரில் தனது நிர்பந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

'ஏதாவது ஒரு வேலைக்காக வீட்டை விட்டு வெளியே செல்லதான் வேண்டியிருக்கிறது. ஆனால் தாலிபான் (Taliban) போராளிகள் ஒரு பெண்ணை தனியாக சாலையில் பார்த்துவிட்டால், அப்பெண்ணின் மரணம் நிச்சயம். அதனால்தான் ஆண்களைப் போல வேடமணிந்து வீட்டை விட்டு வெளியே வருகிறேன்.' என்று ரபியா கூறியுள்ளார். 

அனைத்து நேரங்களிலும் குனிந்த தலையுடனேயே இருக்க வேண்டும் 

ரபியா மேலும் கூறுகையில், 'வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முன் நான் தளர்வான சட்டை, பேன்ட், பாரம்பரிய தலைப்பாகை ஆகியவற்றை அணிவேன். சாலையில் நடந்து செல்லும் போது, ​​என் கண்கள் கீழ் நோக்கி இருக்கும், அதனால் யாரும் என்னை எந்த வகையிலும் அடையாளம் காண முடியாது. எந்தப் பெண்ணும் தனியாக வெளியே செல்லக் கூடாது என்பது தாலிபான் ஆணை. அப்படிப்பட்ட நிலையில் என்னை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டால் மரணம் நிச்சயம்.' என்றார்.

தனது வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், 'ஆப்கானிஸ்தானில் ஒரு பெண்ணாக இருப்பது குற்றம், குறிப்பாக தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மோசமாகிவிட்டது' என்று கூறுகிறார். 

'நீங்கள் தனியாக வசிக்கும் பெண்ணாகவோ (Afghan Women), அல்லது விவாகரத்து பெற்றவராகவோ இருந்தால், ஒவ்வொரு மூச்சும் உங்களுக்கு பாரமாக இருக்கும். எனக்கு 29 வயதாகிறது. நான் விவாகரத்து பெற்ற பெண். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது நாங்கள் காபூலில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறோம்.' என்று அவர் கூறிவதை கேட்க மிகவும் பரிதாபமாக உள்ளது.

ALSO READ | Video: இசைக்கருவியை எரித்து தாலிபான் அட்டூழியம்; கண்ணீர் சிந்தும் இசைக் கலைஞர்! 

இரண்டாவது திருமணத்திற்கான அழுத்தம்

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, தனது மகளை தாலிபான்களிடம் ஒப்படைக்கும்படி அவரது முன்னாள் கணவர் கூறியதாக ரபியா கூறுகிறார். 

'எனக்கும் இரண்டாவது திருமணம் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான் அந்த இரண்டு விஷயங்களுக்கும் சம்மதிக்கவில்லை. தாலிபான் ஆக்கிரமிப்புக்கு முன்பு, நான் ஒரு NGO அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். தாலிபான்களுக்கு பயந்து நான் காபூலுக்கு வந்தேன். டிசம்பரில் எந்தப் பெண்ணும் வீட்டை விட்டு தனியாக வெளியே வரக்கூடாது என்று தாலிபான்கள் இட்ட ஆணைக்குப் பிறகு சிரமங்கள் அதிகரித்தன. பெண்கள் வெளியே செல்ல வெண்டுமானால், அவர்களுடன் ஒரு மெஹ்ரம் (ஒரு ஆண், அதாவது ஆண் பாதுகாவலர்) இருப்பது அவசியம். தாலிபான்கள் ஆட்டோக்கள், டாக்சிகள் என அனைத்தையும் சோதனை செய்யத் தொடங்கினர். அதன் பிறகு நான் ஒரு ஆணைப் போல எனது உருவத்தை மாற்றிகொண்டு வெளியே செல்லத் தொடங்கினேன்' என பரிதாபமாகக் கூறுகிறார் ரபியா. 

தாலிபான்களை எதிர்த்தார்

தாலிபான்களின் இந்த முடிவை தானும் எதிர்த்ததாக ரபியா கூறினார். ஆப்கானிஸ்தான் (Afghanistan) ஆண்களைப் போல் உடை அணிந்து, நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். 'நான் ஒரு பெண், எனக்கு ஆண் காப்பாளர் இல்லை' என இதற்கு தலைப்பிட்டுள்ளார். 

'இதற்குப் பிறகு சில பெண்கள் காபூல் தெருக்களில் தாலிபானி ஆணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து போராடினேன். சில பெண்கள் எங்களுக்கு ஆன்லைன் ஆதரவை வழங்கினர். எங்கள் குரலை நீண்ட காலத்திற்கு அடக்க முடியாது என்பதையே இந்த போராட்டத்தின் மூலம் நாங்கள் தாலிபான்களுக்கு சொல்ல முயன்றோம்.' என்றார் அவர். 

மறைந்து வாழ வேண்டிய கட்டாயம்

போராட்டங்களுக்குப் பிறகு தாலிபான்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டதாக ரபியா கூறியுள்ளார். ரபியா, 'தாலிபான்கள் என்னைத் தேடி வீட்டிற்கு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். மற்ற போராட்டப் பெண்களைப் பற்றி என்னிடம் கேட்டனர், அடித்து துன்புறுத்தினர். எனினும், பின்னர் என் மீதான புகார் கைவிடப்பட்டது. என் மகளுடன் நான் இதுவரை தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். காபூல் தெருக்களில் ஆண் வேடம் அணிந்து செல்கிறேன், மண்ணை பார்த்தபடி நடக்கிறேன். முகத்தில் எப்போதும் முகக்கவசம் அணிந்து கொள்கிறேன். இந்த அவல நிலை எப்போது மாறும் என தெரியவில்லை' என்று கூறுகிறார் ராபியா. 

ALSO READ | பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாச்சாரத்தின் அம்சம்: இம்ரான் கான் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News