இலங்கையின் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தனது பதவியினை ராஜினாமா செய்த நிலையில், தனது ஆட்சி காலத்தில் தன்னைப் புகழ்ந்து, அவமதித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "கடந்த 4 1/2 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் நிகழ்ந்த சாதனைகள் அனைத்தையும் எதிர்காலம் துல்லியமாக சித்தரிக்கும்.
During my tenure I faced both praise and insult. I thank all those who praised me and insulted me, this was a sign of the freedoms we have re-installed in the country.
— Ranil Wickremesinghe (@RW_UNP) November 21, 2019
ஜனநாயகம், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றியுள்ளோம்.
எனது ஆட்சிக் காலத்தில் நான் பாராட்டு மற்றும் அவமானம் இரண்டையும் எதிர்கொண்டேன். என்னைப் புகழ்ந்து, அவமதித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது நாட்டில் நாங்கள் மீண்டும் சுதந்திரத்தை நிலைநாட்டியதன் அடையாளம் ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், கடந்த நவம்பர் 16-ஆம் நாள் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 52.25% வாக்குகளை பெற்று, கோத்தபய ராஜபக்சே வெற்றிப்பெற்றார். இதை தொடர்ந்து, தனது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான, மகிந்த ராஜபக்சேவின் பிறந்தநாளில் பதவியேற்க முடிவு செய்தார். இதையடுத்து, ருவன்வெலி மகா சாய பெளத்த விஹார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கையின் 7-ஆவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கோத்தபய பதவியேற்பு விழாவில், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே, மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோரும், வெளிநாடுகளின் தூதர்களும் பங்கேற்றனர்.
இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, அரசு அலுவலகங்களில், தனது படத்தையோ, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் படங்களையோ வைக்க கூடாது என முதல் உத்தரவை பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து ரனில் விக்ரமசிங்க புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கோட்டபயாவிடம் தோற்ற நிலையில் இந்த அதிரடி முடிவினை ரனில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்., "நாங்கள் பாராளுமன்ற பெரும்பான்மையை அனுபவித்தாலும், ராஜபக்ஷ பெற்ற ஆணையை நாங்கள் மதிக்கிறோம், அவரை ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க அனுமதிக்க முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கையின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது?
என்றபோதிலும், தற்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பதவி விலகியதைத் தொடர்ந்து இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை பிரதமராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தம்பியும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியுமான கோட்டபய ராஜபக்ஷ நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி ஏற்கவுள்ளார்.