பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்தது!
புல்வாமா தாக்குதல், பார்லி., தாக்குதல் உள்ளிட்ட, இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசார். மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியா முறையிட்டது. ஆனால், இந்தியாவின் முயற்சிக்கு, சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.
முன்னதாக புல்வமா தாக்குதலில் சிஆர்பிஎப் படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலைப் படைதான் காரணம் என தகவல்கள் வெளியான உடன் ஐநா., தடைவிதிப்புக் குழுக் கூட்டத்தில், மசூத் அசாரை உலக பயங்கரவாதி என அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆதரவுடன் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது.
ஆனால் இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த சீனா இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்னும் அதிக கால அவகாசம் தேவைப்படுதாக சீனா காரணம் கூறியிருந்தது. சீனா இவ்வாறு தடுப்பது இது 4-வது முறை ஆகும்.
புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதே ஆண்டில் நடைப்பெற்ற காஷ்மீர் சட்டமன்றம் மீதான தாக்குதல், 2016-ஆம் ஆண்டில் பதான்கோட் விமானப் படை தளத்தின் மீதான தாக்குதல் முதலிய தாக்குதல்களில் மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Big,small, all join together.
Masood Azhar designated as a terrorist in @UN Sanctions list
Grateful to all for their support. #Zerotolerance4Terrorism
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) May 1, 2019
இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை உலக பயங்கரவாதி என்று அறிவிக்கும் பிரச்சினையில், ஐ.நா. ஆலோசனைகளில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், முறையாக தீர்வு காணப்படும் என்றும், சீன அரசு செவ்வாய் அன்று தெரிவித்தது. எனவே இன்றைய ஐநா கூட்டத்தில் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படுவான் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்துள்ளது. மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு, உலக அளவில் பொருளாதார, நிதி உதவிகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.