ஜெர்மனியின் முனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு முனிச் நகரின் பிரபல வணிக வளாகத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து முனிச் நகரில் பொதுபோக்குவரத்து சேவை உடனடியாக நிறுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. 7 மணி நேரத்துக்கு பின்னர் முனிச் நகரம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
முனிச் நகர காவல்துறை தலைவர் ஹூபெர்டஸ் ஆண்ட்ரே கூறும்போது:- தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜெர்மன் - இரானியர். அவரது நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இது தீவிரவாத தாக்குதலா இல்லையா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது" என்றார்.
இதற்கிடையில் முனிச் நகர தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி உள்துறை அமைச்சர் தனது விடுமுறை பாதியிலேயே முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் நிலவரம் குறித்து தகவல்களை அவ்வப்போது கேட்டு வருவதாக அவரது அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளார்.