இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணத்தால் 92 பேர் உயிரிழந்த்துள்ளனர். இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழை பெய்துள்ளது.
கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 110 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் கப்பல் இன்று காலையும் இன்னொரு கப்பல் நாளையும் புறப்படும் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.