மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தென்கொரியாவில் ஒன்றிணையும் நிகழ்வு நடைபெறவுள்ளது!
வடகொரியா - தென்கொரியா நாடுகளுக்கு இடையே 1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போரில் லட்சதிற்கும் மேற்பட்டோர் தங்கள் உறவினர்களிடன் இருந்து பிரிந்து வாழ நேரிட்டது. இதுநாள் வரையில் இவர்களில் பலர் மீண்டும் பார்த்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வரும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் பிரிந்தவர்கள் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் இருந்து தலா 100 பேர் பங்கேற்கவுள்ள இந்த சந்திப்பிற்கு இதுவரை 57000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றிணையும் நிகழ்வில் தங்கள் உறவினர்களைச் சந்திக்கும் நபர்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே ஒன்றாக இருக்க அனுமதி கிடைக்கும். பின்னர் வாழ்நாள் முழுதும் அவர்களை சந்திக்க முடியாது என்னும் நிபந்தனையின் பேரிலேயே இந்த நிகழ்வு நடைப்பெறுகின்றது.
தென்கொரியா சார்பில் இச்சந்திப்பில் பங்கேற்கும் 100 பேரும், வயது, குடும்ப பின்புலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கணினி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் சந்திப்புக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் அதிகாரிகளுடனான நேர்காணல் ஆகியவற்றில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சந்திப்பு நிகழ்வில் 650 தென்கொரியர்கள் தங்கள் பிரிந்த உறவுகளை சந்தித்தனர். இந்நிலையில் இந்தாண்டு நடைப்பெறவுள்ள சந்திப்பிற்கு ஆகஸ்ட் 20 முதல் 26-ஆம் நாள் வரையில் காலம் திட்டமிடப்பட்டுள்ளது.