உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களின் காதலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வார்கள்.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரம் புகுத்தப்பட்டுள்ளதாக பல இந்து அமைப்புகள் காதலர் தின கொண்டாடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், பிப்ரவரி 14ம் தேதியை தாய் தந்தையரை வணங்கும் தினமாக கொண்டாட ராஜஸ்தான் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ளது அறிக்கையில்.....!
அடுத்த ஆண்டு (2019) முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 14-ந் தேதி பெற்றோர் தினமாக கொண்டாட வேண்டும்.
கல்வித்துறையில் பின்பற்றப்படும் காலண்டரில் இதை சேர்க்க வேண்டும். இந்தத் தினத்தன்று பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து கலைநிகழ்ச்சி நடத்தி கவுரவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய கலாச்சாரத்தைக் காக்க முடியும் என ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.