பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவது நடைபெற்று வரும் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே,பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு கோரி ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்தப் போராட்டம் 7 வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 70 சதவீதம் பேருந்துகள் கோவையில் 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இன்று காலை நிலவரப்படி கன்னியாகுமரில் 865 பேருந்துகளில் 269 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர்-80%, கன்னியாகுமரியில் 60%, புதுக்கோட்டை - 55% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், ஆனால் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை பொங்கலுக்கு முன் வழங்கும் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 750 கோடி நிலுவைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிபந்தனைகள் முழுவதுமாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த பிரச்சினையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து ஊழியர்கள் பொதுமக்களின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Madras HC urges striking Transport unions to resume work immediately. Court reiterates that public should not be inconvenienced with festive season around the corner, says, government should immediately implement the wage hike of 2.44%.
— ANI (@ANI) January 10, 2018