பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கண்டு விழிபிதுங்கி நிற்கிறது உலகம். இயற்கையின் மாறுதல்களை செய்வதறியாது வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் அறிவியல் விஞ்ஞானிகள். உலகம் முழுக்க இப்போது பெரிதும் விவாதிக்கப்படும் முக்கிய ‘டாபிக்’காக பருவநிலை மாற்றத்தையே முன்னிறுத்துகின்றனர் விஞ்ஞானிகள். இந்தியாவின் பருவநிலை கடந்த கால்நூற்றாண்டில் ‘தாறுமாறாக’ மாறியிருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் ‘சீரியஸ்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கம்போல் தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் பெய்ய வேண்டிய மழை, சம்பந்தமே இல்லாமல் வேறு மாதத்தில் பெய்கிறது. மார்கழியோடு முடியும் பனி, பங்குனி முதல் வாரம் வரை நீடிக்கிறது. இதன் எதிரொலியாக மக்கள் பாதிக்கப்படுவதுடன், சூழலியல் உயிர்களான தாவரங்களும், விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக அக்னி வெயில் மே மாதத்தில் வாட்டி வதைக்கும். அதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் சுட்டெரிக்கும் வெயில், இந்தாண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திலேயே தனது கோரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் வசிக்கும் வனவிலங்குகள் கோடை வறட்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால், பயிர்களை அழித்து சேதப்படுத்தும் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க | இனிமே யானையை பார்க்கும்போது இதையெல்லாம் நியாபகத்துல வெச்சுக்கோங்க!
இதுபோதாதென்று, தற்போது காட்டுத் தீ பிரச்சனை வேறு வனத்துறைக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.
கொடைக்கானல் மற்றும் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பற்றி எரியும் காட்டுத்தீயால் செய்வதறியாது வனத்துறையினர் திகைத்து வருகின்றனர். தீயின் அனலால் காட்டைவிட்டு வெளியேறும் விலங்குகள், தற்போது தண்ணீருக்காவும் வெளியேறி வருகின்றன. கோடையின் வறட்சியால் காட்டிற்குள் பல இடங்களில் தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக வனவிலங்குகளை ஊருக்குள் வராமல் தடுக்க, வனத்துறை புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. முதலில்
நீலகிரி மாவட்டத்தில் காடுகளில் தீப்பிடிக்காமல் இருப்பதற்காக அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டம் பகுதிகளில் செடி கொடிகள் காய்ந்து, கருகியுள்ளது. இவை எளிதில் தீப்பற்றும் அளவிற்கு அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுக்கும்பொருட்டு, முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலம் மற்றும் உள் மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. தீ தடுப்பு கோடுகள் அமைக்க தமிழக அரசும் அவசர கால நிதியை ஒதுக்கியுள்ளதால், காட்டுத்தீயைத் தடுக்க துரித வேகத்தில் பணிகள நடந்து வருகிறது. இதன்மூலம் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு, சந்தனம் போன்ற விலை உயர்ந்த மரங்களை பாதுகாப்பதுடன், யானை, புலி ,கரடி உள்ளிட்ட வனவிலங்குகள், அரியவகை பறவைகள், நுண்ணுயிர்கள் மற்றும் ஊர்வனங்களையும் பாதுகாக்க முடியும் என வனத்துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், கடும் வறட்சியால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க அடர்ந்த காடுகளுக்குள் புதிய தொட்டிகளை அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகளில் புலி, மான், கரடி போன்ற விலங்குகள் தண்ணீர் அருந்துகிறது. தொட்டிகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள இயற்கை ஆர்வலர்கள், தமிழக வனத்துறையின் இந்த முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.