சென்னை: சென்னையில் பரவலாக பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோயமுத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வெப்பசலனம் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.
சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும். அதிகபட்சமாக 37 மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.