முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
இப்போது மீண்டும் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் போட்டியிடப் போவதாக கடந்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது விஷால் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னதாக தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற விஷால், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அடையாறு சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, விஷால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் அரசியல்வாதி அல்ல. மக்கள் பிரதிநிதியாகவே இந்த தேர்தலில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு பின்னால் யாரும் கிடையாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் மக்கள் விரும்புகின்றனர். யாருடைய வாக்கு வங்கியையும் பிரிப்பதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 100% வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மேலும் நான் ரஜினி, கமல் என யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன் என்றார். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்று விஷால், மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.