தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால் நடை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று அங்குள்ள கால்நடை பூங்காக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். தலைவாசலில் அமையும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்காக பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது. ரூ.1000 கோடியில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடை பெற்றது. இன்நிகழ்ச்சியில், ஓ.பன்னீர் செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமி, வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த கண்காட்சி நாளையும், நாளை மறுநாளும் (பிப்., 11 வரை) அங்கு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் மாணவ - மாணவிகள் வரவழைக்கப்பட்டு கால்நடை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.