நாளையுடன் வேலூரில் பிரசாரம் ஓய்கிறது; திமுக - அதிமுக தீவிர பிரசாரம்

நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 2, 2019, 05:40 PM IST
நாளையுடன் வேலூரில் பிரசாரம் ஓய்கிறது; திமுக - அதிமுக தீவிர பிரசாரம் title=

வேலூர்: நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், இரண்டு பிரதான கட்சிகளான அதிமுக - திமுக தலைவர்கள் மற்றும் நாம் தமிழர் சீமான் உட்பட போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்படுகிறது என்றும், அதற்க்காக பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என்றும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் கட்டுகட்டாக பணம் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 38 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 37 தொகுதியில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றனர். 

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த வாரம் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் உட்பட சுயேச்சைகள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மக்களவைத் தேர்தலில் 18 சுயேச்சைகள் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் தான் உள்ள நிலையில், அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், இரண்டு பிரதான கட்சிகளான அதிமுக - திமுக தலைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக - அதிமுக இரண்டு கட்சிகளையும் எதிர்த்து மூன்றாவது கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளரான தீபலட்சுமியை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு உள்ளார்.

Trending News