புதுடெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா? ஏற்றுக்கொள்ளப்படாதா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தரப்பட்டது. மற்ற இரண்டு இடங்களில் திமுக களம் கண்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் வைகோ மனுவை நிராகரிக்க பிறக்கட்சிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளது என்பதால் வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்து என்.ஆர். இளங்கோ, தனது வேட்பு மனுவை நாளை வாபஸ் பெற உள்ளார்.