ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும் ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும் இரு அணிகளின் தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். தங்கள் தரப்பு வாதத்தையும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தினகரன் தரப்பும் கோரியது. அந்த வகையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு அணிகளும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, முதல்வர் பழனிசாமி தரப்பில் கூடுதல் ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் தினகரன் தரப்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதையடுத்து குறித்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக இறுதி விசாரணை நடந்த நிலையில், சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக நாளை தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்க உள்ளது.