டெல்லி விவசாயிகள் போராட்டம் - மத்திய, மாநில அரசுகள் மவுனம் காப்பது ஏன்? என ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உடனடியாக தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலைக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்.
கழுத்தில் தூக்கு கயிற்றை தொங்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சடலமாக நடித்து காட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சாப்பாட்டுக்கு கூட தங்களுக்கு வழியில்லை என்பதை உணர்த்தும் வகையில் எலிக்கறி சாப்பிட போவதாக கூறிய விவசாயிகள் எலியை வாயில் கவ்வியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலையில் சந்தித்து பேசினார்.
பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நியாயமான கோரிக்கைக்காக தங்கள் உடலை வருத்தி விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று புரியவில்லை.
விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்ட குழுவின் பிரதிநிதிகளோடு இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறேன் என அவர் கூறினார்.