தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் ஆளுனர் உரையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது:-
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. ஆளுனர் உரையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன. ஆனால், அதேநேரத்தில் பொதுமக்கள், குறிப்பாக உழவர்கள், எதிர்பார்த்திருந்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
உழவுத் தொழிலின் வளர்ச்சி தான் தமிழகத்தின் சமத்துவமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; உழவுத் தொழில் வளர்ச்சிக்கு பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வ்ந்த நிலையில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை ரூ.1652 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டப் பணிகளுக்கான தொடக்கவிழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.அதேநேரத்தில் இத்திட்டத்தை முழுமையாக பயனளிக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ரூ.ரூ.3523 கோடி செலவில் முந்தைய வடிவத்திலேயே செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை துறைமுகம் & மதுரவாயல் இடையிலான பறக்கும் பாலம் திட்டத்தை முன்னுரிமை அளித்து செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்; அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெறும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மனநிறைவு அளிக்கிறது. இவை அறிவிப்புகளாக இல்லாமல் இவற்றுக்கு அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பதை பா.ம.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுப்பதற்காக புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற ஆளுனரின் அறிவிப்பும் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் மற்றும் 2023 திட்டம் குறித்தும் ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தி முடிக்க இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இத்திட்டத்திற்காக தமிழக அரசு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
திரூவாரூர் மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொருட்களுடன் சேர்த்து தலா ரூ.1000 வழங்கப்படும் என்றும் ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பிற பகுதி மக்களுக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆளுனர் மூலம் தெரிவித்துள்ள அரசு, தாமிர ஆலைகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஆளுனர் கூறியுள்ளார். இதன்தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் நிதியைப் பெற வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, ஆளுனர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றத்தை தருகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அதேபோல் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், உழவர்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1700 கோடி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அத்தொகையை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதுடன், உழவர்களின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை நடப்புக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.