அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்!!

Last Updated : Jun 19, 2017, 03:22 PM IST
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்!! title=

தமிழகத்தில் 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

இதைக்குறித்து எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறியதாவது:-

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். 

இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

இந்த கட்டடம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்" என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Trending News