சிலைக்கடத்தல் வழக்குகளை CBI-க்கு மாற்றி அரசாணை வெளியீடு!

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

Last Updated : Aug 2, 2018, 02:31 PM IST
சிலைக்கடத்தல் வழக்குகளை CBI-க்கு மாற்றி அரசாணை வெளியீடு!  title=

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

தமிழகத்தில் சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை சமீபத்தில் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, சிலைகடத்தலுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளிலும் பொன்.மாணிக்கவேல் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில், சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்ற செய்தி நேற்று வெளியானது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணையிலும், நேற்று இந்த தகவலை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். "சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அமைத்து ஓராண்டாகியும் பொன்.மாணிக்கவேல், வழக்குகளின் விபரங்களை  தமிழக அரசுக்கு தர மறுக்கிறார். பொன் மாணிக்கவேல் விசாரணையில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. அவர் சிறப்பாக செயல்படவில்லை" எனவும் குற்றம் சாட்டப்பட்டது. உடனே நீதிபதிகள், 'மாநில அரசின் காவல்துறையினர் மீது அரசுக்கே நம்பிக்கையில்லையா?' என கேள்வி எழுப்பினர்.

பின்னர் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, "இந்த வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தான் உத்தரவிட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை.அரசுக்கு  தகவல்களை அளித்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. மேலும், குற்றவாளிகளும் தப்பிக்கும்படியான வாய்ப்பும் இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது. அதில் பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படாததால் வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது! 

 

Trending News