515 புதிய பேருந்துகளை மக்களின் பயனுக்காக துவக்கி வைத்தார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (3.7.2018) 515 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 3, 2018, 01:30 PM IST
515 புதிய பேருந்துகளை மக்களின் பயனுக்காக துவக்கி வைத்தார் முதல்வர் title=

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (3.7.2018) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 134 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான 515 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதைக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,744 பேருந்துகளை, நாள்தோறும் 87.22 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி வருகிறது.

சுமார் 1 கோடியே 80 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். மேலும், புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டடங்கள், கோட்டங்கள் கட்டுதல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை) 40 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 60 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 78 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 172 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 64 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 69 பேருந்துகளும், என 134 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 515 புதிய பேருந்துகளை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இப்புதிய பேருந்துகளில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதன் முறையாக, குளிர்சாதன வசதி படுக்கையுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள் ஆகிய பேருந்துகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று முதல் இயக்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஞ.று.ஊ.டேவிதார் இ.ஆ.ப., அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Trending News