TN Budget 2024: பட்ஜெட்டில் சென்னை மக்களுக்கு இத்தனை நன்மைகளா? - முழு விவரம்

TN Budget 2024: 2024-25 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் சென்னை நகரத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 19, 2024, 03:26 PM IST
  • மெட்ரோ விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • கலைஞர் பன்னாட்டு அரங்கு முட்டுகாடு பகுதியில் வர இருக்கிறது.
  • சென்ட்ரல் பகுதியிலும் ஒரு நவீன கட்டடத்தை கொண்டு வர திட்டம்.
TN Budget 2024: பட்ஜெட்டில் சென்னை மக்களுக்கு இத்தனை நன்மைகளா? - முழு விவரம் title=

TN Budget 2024: தமிழ்நாடு அரசு 2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாவது முழு பட்ஜெட் தாக்கல் இதுவாகும். கடந்த ஆண்டுகளில் நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்த நிலையில், இந்தாண்டு முதல்முறையாக அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

மூன்று நாள்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காலை 10 மணியளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். "தடைகளை தாண்டி, வளர்ச்சியை நோக்கி" என்ற அழைக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில்,"மாபெரும் 7 தமிழ் கனவுகள்" என்ற பெயரில் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகின. 

அனைவருக்குமான பட்ஜெட்

மாபெரும் 7 தமிழ் கனவுகளில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அடங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், சுமார் 2 மணிநேரம் 7 நிமிடங்களுக்கு உரையை நிகழ்த்திய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பல தரப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். 

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2024-மகளிர் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் என்னென்ன?

கொங்கு மண்டலம், டெல்டா, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய திட்டங்களை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்தது. அதில் தலைநகர் சென்னைக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து இங்கு காணலாம். 

மெட்ரோ விரிவாக்கம்

மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை சிவப்பு லைன் மெட்ரோவும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை பச்சை லைன் மெட்ரோவும், கோயம்பேடு முதல் ஆவடி வரை மஞ்சள் லைன் மெட்ரோவும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு சுமார் ரூ. 12 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.  

பசுமைவழிப் பயணம்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடையாறு நதிச் சீரமைப்புக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நீலக் கொடி சான்றிதழ் என்ற ரீதியில் தமிழக கடற்கரைகள் மேம்பாடு திட்டத்தில் சென்னை மெரினாவும் சேர்க்கப்பட்டது. 

வடசென்னை வளர்ச்சித் திட்டம்

இதில் புதிய குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்பயிற்சி மையங்கள், ஏரிகள் சீரமைப்பு, திறன்மிகு பள்ளிகள் என வடசென்னையில் கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு என்ற தலைப்பின் கீழ் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. 

சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம்

பூந்தமல்லியில் அதிநவீனத் திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு, ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இலவச Wifi வசதி ஏற்படுத்தித் தரப்படும். பிராட்வே பேருந்து மேம்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. \

மேலும் படிக்க | TN Budget 2024 Highlights:தமிழகத்தில் வரப்போகும் மாற்றங்கள் என்ன? எந்த திட்டத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

சென்னை பாரிமுனையில் உள்ள குறளகம் கட்டடம் நவீன வசதிகளால் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் பகுதியில் 'சென்ட்ரல் பிளாசா' என நவீன கட்டடம் திறக்கப்படும். 27 தளங்கள் கொண்ட அந்த கட்டடம் 10 லட்சம் சதுர அடியில் சுமார் ரூ.688 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

மாணவர் நலன்

1,000 நபர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆறு மாத உறைவிடப் பயிற்சியாகும். இதற்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், கோவை, மதுரை மட்டுமின்றி சென்னையிலும் அமல்படுத்தப்படுகிறது. 

கலைஞர் பன்னாட்டு அரங்கம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் சுமார் 3 லட்சம் சதுர அடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் ரூ.227 கோடி ஒதுக்கீட்டில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News