சென்னை: தி.மு.க – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஆறு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டனர்.
"எங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு ஆறு இடங்களை ஒதுக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்த போதிலும், சனாதனா படைகள் ஏற்படுத்தும் ஆபத்தை நாங்கள் கவனத்தில் கொண்டு இதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம். மதச்சார்பற்ற வாக்குகள் பிரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் முடிவு தொலைநோக்கு மற்றும் தமிழக அரசியலின் எதிர்காலம் ஆகியவற்றை சார்ந்து எடுக்கப்பட்டது” என்று திருமவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். வி.சி.க தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று அவர் கூறினார்.
வி.சி.க எத்தனை ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் என்று கேட்டதற்கு, திருமாவளவன், திமுக தலைமையுடன் அடுத்தடுத்த கலந்துரையாடல்களில் அது முடிவு செய்யப்படும் என்றார்.
தமிழகத்தை சனாதன படைகளின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க திமுக கூட்டணியில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அதே வேளையில், இரு இடதுசாரி கட்சிகளுக்கும், மாதிமுக-வும், தங்கள் அமைப்புகளின் நலனுக்காக தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் தேர்தல் சனாதனப் படைகளைத் தோற்கடிப்பதற்கான ஒரு போர். பாஜக தமிழகம் மற்றும் புதுச்சேரியை குறிவைத்து இந்த மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளது. ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி இல்லாததை அது சாதகமாகப் பயன்படுத்துகிறது. பல தசாப்தங்களுக்குப் பிறகும், அதனால் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது.” என்று அவர் தெரிவித்தார்.
சசிகலாவின் முடிவைப் பற்றி கேட்டபோது, மன அமைதிக்காகவோ, பாஜகவின் அழுத்தத்தின் கீழ் வந்தோ அல்லது அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கத்தினாலோ அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றார் அவர். "தேர்தலில் திமுக வெற்றி பெறக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். அதிமுக மற்றும் அமமுக ஆகியவை ஒன்றாக வருவது குறித்து அவர் குறிப்புக்காட்டி உள்ளார் என்பது தெளிவாகிறது. அதிமுக வலுப்பெற்றால், பாஜகவும் பலம் பெறுகிறது என்பதாகும். சமூக நீதியின் நிலமான தமிழ்நாட்டிற்கு இது நல்லதாக இருக்காது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR