சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவிப்பு...!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், 3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டார். இணையதளங்கள் சர்கார் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் HD பிரிண்டை விரைவில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்திருந்தது.
இதை தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் தமிழ் ராக்கர்ஸ்-க்கு மீண்டும் சவால்விட்டுள்ளது. சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என்றும் ஒவ்வொரு திரையரங்கிலும், ஒருவரை நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருப்பதாகவும், யாரேனும், செல்போனிலோ, கேமரா மூலமாகவோ படத்தை பதிவு செய்தால் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது..!