ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பதில், ஆளுநர் தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்வார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
வரும் 20-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. அதற்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படவுள்ள இடத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகோயோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்... எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ஆளுநர் தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்வார் என மேற்கொள் காட்டியுள்ளார்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது, இதன் காரணமாக தான் அமைச்சரவை தீர்மானம் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு... அதிகரித்துக் கொண்டே செல்லும் விலை உயர்வினை ஏற்கமுடியாது, மத்திய அரசு கலால் வரியை 50% குறைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.