டாஸ்மாக்கை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின் போது தமிழகத்தில் 5,239 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், இதில் 1,500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அரசின் இந்த முடிவு ஏற்கத்தக்கதல்ல எனக் கூறிய நீதிபதிகள்,
டாஸ்மாக்கை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய வரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.