கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும்: PMK

பிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Dec 2, 2020, 12:44 PM IST
கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும்: PMK title=

கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக்கு தமிழகத்திலுள்ள தனியார்  ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட 4 மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா (Corona) ஆய்வுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,400  வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ரூ.850, உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.900 என்ற அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் வீட்டுக்கே வந்து கொரோனா ஆய்வு மாதிரி எடுத்துச் செல்ல ரூ.1,100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் ரூ.1,600 மட்டுமே கொரோனா ஆய்வுக் கட்டணமாக (RT-PCR test) வசூலிக்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் கொரோனா ஆய்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கட்டணக் குறைப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ALSO READ | கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையக்கூடும்: புதிய ஆய்வு..!

கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் உச்சத்தில் இருந்த போது ஆர்.டி. - பி.சி.ஆர் கொரோனா ஆய்வுக்கான  அதிகபட்சக் கட்டணமாக ரூ.4,500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சில ஆய்வகங்களில் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக் கருவிகள் தாராளமாக கிடைக்கத் தொடங்கிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.3,000 ஆகவும், வீடுகளுக்கு வந்து சளி மாதிரி எடுத்துச் செல்ல ரூ.500 கூடுதல் கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கட்டணம் குறைக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தனியார் ஆய்வு மையங்களில் 6 மாதங்களாக இதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆய்வுக்கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக இருந்தாலும் அவற்றில் மிகவும் முக்கியமானது கொரோனா ஆய்வு ஆகும். எந்த அளவுக்கு அதிகமாக கொரோனா ஆய்வுகளை நடத்துகிறோமோ, அந்த அளவுக்கு கொரோனா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 8 கோடி என்றாலும், நேற்றைய நிலவரப்படி 1.18 கோடி பேருக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் இலவசமாக ஆய்வு செய்து கொண்டவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் பெரும்பான்மையினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டால் மட்டும் தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். அரசு ஆய்வகங்களால் மட்டும் அனைவருக்கும் ஆய்வு செய்ய முடியாது. இதில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு முக்கியம்.

ALSO READ | தமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் (Tamil Nadu) இன்றைய நிலவரப்படி 221 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் 67 ஆய்வகங்கள் மட்டுமே அரசுக்கு சொந்தமானவை. மீதமுள்ள 154 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. தனியார்  ஆய்வகங்கள் மூலம் அதிக அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டால், ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை மிகவும் விரைவாகவும், எளிதாகவும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். தனியார் ஆய்வகங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கான ஆய்வுக் கட்டணம் கட்டுபடியாகும் அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

கொரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கான கருவியின் ரூ.200 ஆக குறைந்து விட்ட நிலையில், அதைவிட 15 மடங்கு  கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. கொரோனா ஆய்வுக் கட்டணத்தை ரூ.400 ஆக குறைக்க முடியுமா? என்று மத்திய அரசிடமும், தனியார் ஆய்வகங்களிடமும் உச்சநீதிமன்றம் அண்மையில் வினா எழுப்பியுள்ளது. எனவே, பொதுநலன் கருதி தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.800 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ALSO READ | கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News