தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்....
தமிழகத்துக்கு நல்லது செய்பவர்களுடன் தான் கூட்டணி என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர்களுடன் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு. "தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன" என்று அவர் கூறியிருந்தார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின், உறுதியாக பா.ஜ.கவுடன் திமுக கூட்டணி அமைக்காது என்று கூறினார். இந்நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், தி.மு.கவில் ஒரு குடும்பத்தினர் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். கலைஞரின் மகன்கள், மகள் மற்றும் குடும்பத்தினர் கட்சியில் பதவிகளை பெற்றனர். அதிமுக-வில் மட்டும் தான் அடிமட்ட தொண்டர்களும் உயர் பதவிக்கு வர முடியும்.
திமுக தலைவராக கலைஞர் இருந்தார், தற்போது அவர் மகன் ஸ்டாலின் தலைவராக உள்ளார். பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது - விலையில்லா வேட்டி சேலையும் கொடுக்கிறோம்.
அ.தி.மு.க அரசுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த ஸ்டாலின் ஏன் அப்போது கிராமங்களுக்கு செல்லவில்லை?. நானும் சரி அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் சரி கிராமத்திலேயே வளர்ந்தவர்கள் - கிராம மக்களின் பிரச்சனைகள் தெரியும்.
கிராம மக்களின் பிரச்சனை என்ன என்று ஸ்டாலினுக்கு தெரியாது - அதனால் தான் தற்போது தெரிந்து கொள்ள சென்றுள்ளார். துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கிராமங்களுக்கு சென்று இருந்தால் பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் அ.தி.மு.க அல்ல. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பது தி.மு.க தான் - உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியது தி.மு.க தான். தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்கள் தான் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு தான் அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.