தமிழ்நாட்டில் காவி கொடியை பறக்க வைக்க பாஜக தீவிரமாக களமாடிவருகிறது. அதனால் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து மாற்றுக்கட்சியினரின் வாசம் கமலாலயத்தில் பலமாகவே அடித்தது. அதேபோல் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் என சுற்றி சுழல்கிறார். இதனால் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவா இல்லை பாஜகவா என்ற விவாதமும் எழுந்தது.
நிலைமை இப்படி இருக்க தமிழகத்தின் கிராமப்புறங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கத்தில் அண்ணாமலை தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவிதமாக கிராமப்புறங்களில் பாஜகவில் இணைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
சமீபத்தில்கூட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி தலைவர்கள், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்து அக்கட்சியில் தங்களை இணைத்துகொண்டனர். அவர்களை அண்ணாமலை சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் பண்ணப்பட்டியிலிருந்து ஏராளமானோர் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதேபோல் திமுக மற்றும் அதிமுகவிலிருந்து சிலர் பாஜகவில் இணைந்தனர். இச்சூழலில், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டை சர்ச்சையாகியுள்ளது.
மேலும் படிக்க | கோவையில் ஜோதிடர் மரணம் : வழக்குத் கொடுத்தவர்கள் மீதே வழக்குப்பதிவு! - என்ன நடந்தது?
அதாவது, புதிதாக இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட காவி நிற உறுப்பினர் அட்டையில் பாரத மாதா புகைப்படம், பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் மாநில தலைவரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். அந்தவகையில் தற்போது வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டையில் அண்ணாமலையின் புகைப்படமும் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அண்ணாமலை புகைப்படத்துக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜனின் புகைப்படமும், அவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.
தமிழக பாஜகவின் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். அவர் தற்போது இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கிறார். அப்படி இருக்கும்பட்சத்தில் எப்படி, ஒரு கட்சியின் உறுப்பினர் அட்டையில் அவரது பெயரும், புகைப்படமும் இடம்பெறலாம் என பலர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.
அதேசமயம், இந்த அட்டைகள் ஏற்கனவே அடிக்கப்பட்ட அட்டைகள். கவனக்குறைவால் இதுபோன்ற தவறு ஏற்பட்டுவிட்டதாக சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூறினாலும், எதில் வேண்டுமானாலும் அலட்சியமாக இருக்கலாம். ஆனால் மாநில தலைவர் விஷயத்தில் இப்படியா அலட்சியமாக இருப்பது. இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் எப்படி தாமரை மலரும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகிண்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ