மூன்றாம் பாடமாக தமிழ்; கோரிக்கை வைத்த முதல்வர் tweet நீக்கம்!

தமிழ் பேசா மாநிலங்களில் விருப்பப்பாடமாக தமிழ் மொழியை பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி விடுத்த கோரிக்கை ட்வீட் மாயமாகியுள்ளது!

Last Updated : Jun 5, 2019, 03:28 PM IST
மூன்றாம் பாடமாக தமிழ்; கோரிக்கை வைத்த முதல்வர் tweet நீக்கம்! title=

தமிழ் பேசா மாநிலங்களில் விருப்பப்பாடமாக தமிழ் மொழியை பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி விடுத்த கோரிக்கை ட்வீட் மாயமாகியுள்ளது!

நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமலில் உள்ளது. சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கைகளை உருவாக்க டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 2016-ஆம் ஆண்டு பல்வேறு பரிந்துரைகளை வரையறுத்து அறிக்கை தாக்கல் செய்தது. எனினும் இந்த அறிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து வேறு ஒரு புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. 8 பேர் இடம் பெற்ற அந்த குழு நாடு முழுவதும் ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அந்த அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. 

உடனடியாக அந்த அறிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது. 484 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதிய திட்டங்களுக்கான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி வழிகல்வியை கட்டாயம் பயில வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். இந்தி அல்லாத மற்ற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் 3-வது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்றுத்தரப்பட வேண்டும். மேல்நிலை வகுப்புக்கு செல்வதற்கு முன்பு ஒவ்வொரு மாணவனும் தலா 3 மொழிகளில் நன்றாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை கஸ்தூரிரங்கன் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மத்திய அரசு திட்டமிட்டு இந்தியை தமிழக மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மத்திய அரசு தனது பரிந்துரையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.

இதையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. பரிந்துரை மட்டும்தான் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை மீதான புதிய கல்வி கொள்கை பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இ.மெயில் மூலம் மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

என்றபோதிலும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் ஓயவில்லை. இந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியைதான் படிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருபோதும் ஏற்க இயலாது என்ற குரல் டெல்லி வரை எதிரொலித்தது. இதையடுத்து கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தில் தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும்" என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போது முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்த ட்வீட் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

யாருடைய அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டு முதல்வர் இந்த ட்வீட்டை நீக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை...

Trending News