பள்ளி மாணவர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிவித்த முக ஸ்டாலின்!

"அனைவருக்கும்  IITM" திட்டத்தில்  மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

Written by - RK Spark | Last Updated : Apr 6, 2023, 07:28 AM IST
  • தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு திட்டம்.
  • மாணவர்களுக்கான பல புதிய திட்டங்கள்.
  • சென்னை ஐ.ஐ.டி.(IIT)யில் அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின்.
பள்ளி மாணவர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிவித்த முக ஸ்டாலின்! title=

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் "அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். (IITM)" திட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.  மேலும் "கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெறுவார்கள்" என்பதில் சந்தேகமில்லை.  அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருவது பெருமைக்குரியது என்றும் கூறினார்.  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடிக் கல்வி”, "நம் பள்ளி நம் பெருமை", ‘நான் முதல்வன்’ என்கிற  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டம் என பல்வேறு கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

அனைவருக்கும் IITM திட்டமானது, சென்னை ஐஐடி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு அன்று முதல் 8.2.2023 வரை ஆறு கட்டங்களாக 250 பள்ளிகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நம் நாட்டின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான சென்னை ஐஐடியை கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும்  கொண்டு சேர்க்கும் முயற்சியாக அந்நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தி வரும் திட்டம் “அனைவருக்கும் IITM” ஆகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐஐடி, சென்னையால் வழங்கப்படும் நான்காண்டுப் படிப்பான B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் கடந்த கல்வியாண்டில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!

மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு வார காலம் சென்னை ஐ.ஐ.டியில் அடிப்படைக் கணிதம் மற்றும் அறிவியல் குறித்த உண்டு உறைவிடப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 இலட்சம் மாணவர்கள் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கினார். 

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்கவுள்ள பயிற்சி முடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் சென்னை-ஐஐடி-க்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் இடையே  தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், 250 அரசுப் பள்ளிகளின் 1 இலட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

மேலும் படிக்க: டெல்டா மாவட்டங்களை சீரழிக்க முயற்சி! மத்திய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!

தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர்,  கல்வித் துறையில் அதிகமான கவனத்தைச் செலுத்துகிறோம்.  கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. எதன் பொருட்டும் எவருக்கும் எந்த வாய்ப்பும் தடுக்கப்படக் கூடாது - அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் திறந்திருக்க வேண்டும் - என்ற அடிப்படை முறையை ஆட்சி நெறிமுறையாகக் கொண்ட அரசு இது.  ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காகவும், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கும் வகையிலும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருவது பெருமைக்குரியது.

அனைவர்க்கும் கல்வி - அனைவர்க்கும் உயர்கல்வி என்பதை இலக்காகக் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது IITசென்னை. IIT சென்னையில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதே தம் வாழ்வின் இலட்சியமாக நினைத்து இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகின்றனர்.  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டிலுள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்குத்  தயார்படுத்துவதே  இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்புதான் இது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம், நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் வகையிலும் நம் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து உருவாக்கியுள்ள திட்டமே “அனைவருக்கும் IITM”.

அனைவருக்கும் IITM திட்டத்தின் முதற்கட்டமாக, IIT சென்னையில் நான்காண்டுப் படிப்பாக வழங்கப்படும் B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87மாணவர்களில் 45 மாணவர்கள் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இவை அனைத்தும் சேர்ந்து பள்ளிக் கல்வித் துறையில் மாபெரும் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டுள்ளது.   இத்திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும் (500மாணவர், 500 மாணவியர்) 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பினையும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.  அவர்களுடைய பன்னிரண்டாம் வகுப்பினை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/-வழங்கப்படும்

மேலும் படிக்க | செல்லூர் ராஜூ வைத்த கோரிக்கை! மழுப்பலாக பதிலளித்த அமைச்சர் பொன்முடி!

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி வரும்  இது போன்ற திட்டங்களின்  தொடர்ச்சியாக தற்போது “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வுத் திட்டம்” என்ற மிக முக்கியமான புதியதிட்டத்திற்கான அறிவிப்பினை இந்த நிகழ்வில் வெளியிட்டு, அறிமுகம் செய்து தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000/- வீதம் உதவித் தொகையும் பெறுவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எதன் பொருட்டும் ஒருவரது வாய்ப்பு பறிபோகக் கூடாது என்று சொன்னேன். அரசு பள்ளியில் படிக்கும் நமக்கு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான தனிப்பயிற்சிகள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எவருக்கும் இருக்கக் கூடாது. அதற்காகத் தான் இந்தத் திட்டம் ஆகும்.

சமூக அமைப்போ - பொருளாதார நிலைமையோ - அவர்களது வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது.  பெண் என்பதற்காக பள்ளிப் படிப்போடு அவர்களது கல்வி நிலை சுருக்கப்படக் கூடாது. இத்தகைய சமூக அநீதிகளைக் களைவது தான் சமூகநீதியாகும்.  இடஒதுக்கீடாக இருந்தாலும் - கல்வி உதவித் தொகைகளாக இருந்தாலும் தரப்படுவதற்கு இதுதான் காரணம்.  இது போன்ற சமூகநலத்திட்டங்களின் காரணமாகத் தான் சமூகமும் வளர்ந்துள்ளது. நாடும் வளர்ந்துள்ளது.  சமூகத்தின் அனைத்துத் தரப்பின் அறிவு சக்தியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.  அதற்கு கல்வி - அறிவியல் பூர்வ கல்வி - பகுத்தறிவுக் கல்வி வேண்டும். இக்கல்வியானது வேலைக்குத் தகுதிப்படுத்துவதாக மட்டும் இருக்கக் கூடாது. அந்த மாணவனை தன்னம்பிக்கை உள்ள மனிதனாகத் தகுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.  கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை மட்டுமல்ல - மன ஆற்றலையும் உருவாக்குபவைகளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  மாணவர் திறனறித் தேர்வுத் திட்டத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

“தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” திட்டம்

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தையும்  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.  இப்புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேலும், இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர்பயிற்சிகளும் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும்பொழுதும் ஒவ்வோர் ஆண்டும் ரூ.12,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.

மேலும் படிக்க | 'காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்' போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News