சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா மாவட்டங்கள் சிறப்பு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகளாக அறிவிக்ப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை தொடர்பாக சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்பிறகு, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல தொடர்பான சட்ட முன் வடிவு தாக்கல் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு வேளாண் மண்டல மசோதாவை தாக்கல் செய்த பிறகு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகளாக அறிவித்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறங்தாங்கி, ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.