புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய வந்த, வருவாய்த் துறை அதிகாரிகளை தடுத்து, கிராம மக்கள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 31 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க, கடந்த, 15-ல், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
தினம் தினம் ஒரு போராட்டம் செய்து அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீரும் கடுமையாக சுண்டிப் போயுள்ளது.
இதையடுத்து, திட்டம் தொடங்கப்பட்டால் நெடுவாசல், அதைச் சுற்றியுள்ள, 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, தங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் எனக்கூறி, அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெடுவாசலில், ஒ.என்.ஜி.சி., நிறுவனத்தால் முன், கையகப்படுத்தப்பட்ட விளைநிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது, நெடுவாசல் பகுதி விவசாயிகள், 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு, விளைநிலங்களில் ஆய்வு செய்யவிடாமல் தடுத்து, அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு உடனே ஒப்புதலை திரும்பப் பெற வலியுறுத்தி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 27ம் தேதி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம் போராட்டம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கிராம மக்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.