ஆவின் வரலாற்றில் இல்லாத வகையில், 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, ஆவின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார் இ.ஆ.ப வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது ஆவின்.
இந்த இக்கட்டான நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் நுகர்வோர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பு, நாளொன்றுக்குச் சராசரியாக 28.50 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகத் தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் அளவு மற்றும் பால் விலையைக் குறைத்து விட்டனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் சிக்கலில் தவித்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் 100 புதிய பால் கூட்டுறவுச் சங்கங்கள், 378 பால் கொள்முதல் நிலையங்களைத் துவங்கப்பட்டது. அதன் மூலம் 12,800 புதிய உறுப்பினர்களைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்புக்குள் கொண்டு வந்தது ஆவின் நிர்வாகம். இதனால் படிப்படியாக ஆவின் பால் கொள்முதல் அதிகரித்தது. இந்நிலையில், ஆவின் சாதனையில் மற்றொரு மைல்கல்லாக 07.05.2020 அன்று 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மூலம் 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்குக் கலப்புத் தீவனம், தாது உப்புக்கலவை, பசுந்தீவனம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது ஆவின் நிர்வாகம். அத்துடன் கால்நடை மருத்துவ உதவி தேவைப்படும் பால் உற்பத்தியாளர் வீடுகளுக்கே சென்று, ஆவின் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருந்தாலும் அதைத்தாண்டி, ஊரடங்கு காலத்தில் பால் மற்றும் பால் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சிறப்பாகச் சேவை செய்து வருகிறோம். பால் கொள்முதலில் சாதனை செய்தது போலவே, பால் விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது ஆவின். எங்கள் தொடர் முயற்சி காரணமாக நாளொன்றுக்குச் சராசரியாக 24 இலட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை தற்போது 25 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக மாதவரம் பால் பண்ணையில் நிலவிய இடர்பாடுகள், தொடர் முயற்சி காரணமாகச் சரிசெய்யப்பட்டு 08.05.2020 அன்று அதிகாலை 3 மணி முதல் பால் பண்ணையிலிருந்து வாகனங்கள் மூலம் அனைத்து பால் விற்பனை வழித்தடங்களுக்கும் பால் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது பால் பண்ணை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பணிக்கு வரும் பணியாளர்கள் அனைவரும் நுழைவாயிலில் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முறையாக பாதுகாப்பு உறைகள், முககவசம் அணிந்து பணியாற்றுகிறார்கள்.
தொடக்கத்திலிருந்தே இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கிருமிநாசினி மூலம் அடிக்கடி பணியாளர்கள் கைகழுவுவது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஷிப்ட் முடிந்த பிறகும் ஆவின நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பால் பண்ணைகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. ஷிப்ட் முடிந்த பிறகும் கிருமிநாசினி மற்றும் சோப் தண்ணீர் மூலமாகப் பண்ணைகளின் அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்தப்படுகிறது. பண்ணை முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்ட பிறகே அடுத்த ஷிப்ட் பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அதிக கவனத்துடனும். அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறோம். முழுமையான சுகாதார முறையில் உற்பத்தி செய்யப்படும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கிடைக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் மக்களோடு இருக்கும் ஆவின் நிறுவனத்திற்குப் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு ஆவின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார் கேட்டுக்கொண்டுள்ளார்.