தமிழ்நாட்டின் ஸ்பீக்கர் சரியில்லை: மு.க.ஸ்டாலின்!

Last Updated : Sep 8, 2017, 05:53 PM IST
தமிழ்நாட்டின் ஸ்பீக்கர்  சரியில்லை: மு.க.ஸ்டாலின்! title=

தமிழ்நாட்டின் தலைமை சரியில்லாத காரணத்தால் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட நீதிமன்றம் உத்திரவிட வேண்டியுள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சி உருவானதும் எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தஞ்சாவூரில் நடைபெற்ற மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி உரை ஆற்றுகையில் மைக்கும், அதனைத்தொடர்ந்து ஸ்பீக்கரும் முறையாக வேலை செய்யாமல் தகராறு செய்தன. அப்போது அவர் கூறியதாவது 

"இதுபோல, இன்றைக்கு தமிழ்நாட்டில் ஸ்பீக்கரே சரியில்லை, அதாவது தமிழ்நாட்டில் சபாநாயகரே சரியில்லை. அந்த ஸ்பீக்கர் உரிமைக்குழுவைக் கூட்டி எங்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்க எப்படி எல்லாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். ஆனால், நேற்றைக்கு சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகர் எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தடையுத்தரவு போட்டுள்ளதையும், செய்திகளில் அறிந்திருப்பீர்கள். நாட்டில் ஜனநாயகம் தழைக்க, நீதிமன்றம் தலையிட்டு உத்திரவிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

மணவிழா காணும் இரு குடும்பங்களும் இதற்கு முன் கழகத்தினால் இணைக்கப்பட்டு இருந்தாலும், இப்போது நடைபெறும் திருமணத்தின் மூலம் ஒருவருக்கொருவர் உறவுகளாக மலர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இணைகின்ற நிகழ்ச்சிகளை நாம் இங்கு பார்க்கிறோம். ஆனால், ஆளும்கட்சி யினர் இணைகின்ற அந்த நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில், ஏற்கனவே இணைந்து இருப்பவர்கள் இப்போது பிரிந்து இணைகிறார்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கின்ற வேறுபாடு.

அவர்கள் அப்படி பிரிவதற்கு யார் காரணம்? மத்தியில் இருக்கும் ஆட்சி. இப்போது அவர்கள் இணைவதற்கு யார் காரணம்? அதுவும் மத்தியில் இருக்கின்ற ஆட்சி. அதனால் தான் சொன்னேன், மத்தியில் இருக்கின்ற ஆட்சி, குறிப்பாக பிரதமராக இருக்கின்ற மோடி அவர்கள் கட்டபஞ்சாயத்துக்காரர் போல செயல்படுவதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். நம் ஊர்களில் நாட்டமைகளை நாம் பார்த்திருக்கிறோம். நாட்டாமை என்றால் நல்லது செய்பவர்கள் தான் நாட்டாமை.

ஆனால், அந்த நாட்டமையின் வேலை என்னவென்றால், ஒன்றாக இருப்பவர்களைப் பிரிப்பதும், பிரிந்திருப்பவர்களை ஒன்றாக்குவதுமாக உள்ளது. அவர்களை இரண்டாக பிரித்தாலும் காசு, ஒன்றாக இணைத்தாலும் காசு என்பது தான் கட்டபஞ்சாயத்து. அதுபோல, இன்றைக்கு மத்தியில் உள்ள ஆட்சி கட்டபஞ்சாயத்து நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் தமிழ்நாட்டின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

தஞ்சை மண்ணில் பிறந்த உங்களுக்கு நான் அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காரணம், தஞ்சை மண் என்பது அரசியல் விழிப்புணர்வை அதிகம் கொண்ட மண். அதைவிடப் பெருமையாக சொல்வதெனில், தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த மண், இந்த தஞ்சை மண். இந்த நிலையில் நான் உங்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புவது, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அக்கிரமங்கள் கொடுமைகளை எல்லாம் அறிந்திருப்பீர்கள், இது ஒரு மங்களகரமான விழா என்பதால், திருமண விழா என்பதால் நான் பல பிரச்னைகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை.

எனவே, ஒரே ஒரு வரியில் சொல்வதென்றால், இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும், நாம் நன்றாக இருக்க வேண்டும், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியினர் நலமோடு வாழ வேண்டுமென்று சொன்னால், நமக்கென்று நம்முடைய ஆட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். இப்போது நான் எங்கே சென்றாலும் திமுகவினர், தோழமைக் கட்சியினர் மட்டுமல்ல, கட்சிகளுக்கு அப்பாற்பட்டுப் பொதுவாக இருக்கக்கூடிய விவசாயிகள், நெசவாளர்கள் தொழிலதிபர்கள், தொழி லாளர்கள், வணிகர் பெருமக்கள் என இப்படி யாராக இருந்தாலும், கேட்கும் முதல் கேள்வி, “எப்போது இந்த ஆட்சி கவிழும்? எப்போது நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள்?”, என்பவை தான். அப்படிப்பட்ட நிலை நாட்டில் உருவாகியுள்ளது.

எனவே, இந்த ஆட்சியை நாங்கள் கவிழ்ப்போம் என்று சொல்லவில்லை, விரைவில் இந்த ஆட்சி கவிழும், தானாக கவிழப்போகிறது என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு, அதன் பிறகு மீண்டும் தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் பீடுநடைப்போடக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உருவாகும், அப்படி உருவாகும் நேரத்தில் இன்றைக்கு இருக்கின்ற எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சிறந்ததொரு தமிழ்நாட்டை, ஒரு நல்ல தமிழ்நாட்டை, நீங்கள் எதிர்பார்க்கும் தமிழ்நாட்டை விரைவில் நீங்கள் காணவிருக்கின்றீர்கள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

மேலும், படித்த பட்டதாரிகளாக, பண்பாடு நிறைந்தவர்களாக, நாட்டில் உள்ள நிலைமைகளை நன்கு அறிந்தவர்களாக, இங்கு மணக்கோலம் பூண்டுள்ள மணமக்கள் பிரித்திவிராஜ் – சூர்யா ஆகிய இருவரும், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சொன்னது போல, ‘வீட்டுக்கு விளக்காய் நாட்டுக்குத் தொண்டர்களாய்’, இருவரும் இணைந்து வாழுங்கள் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்." என தெரிவித்துள்ளார்.

Trending News