பாஜக-வின் புறவாசல் அரசியல் செல்லுபடியாகாது - முதலமைச்சர் காட்டம்

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2023, 05:27 PM IST
  • செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை
  • முதலமைச்சர் முக.ஸ்டாலின் கண்டனம்
  • பாஜக புறவாசல் அரசியல் செல்லுபடியாகாது
பாஜக-வின் புறவாசல் அரசியல் செல்லுபடியாகாது - முதலமைச்சர் காட்டம் title=

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன. இந்த நிலையில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 'சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், எந்தச் சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தயார்' என்று அமைச்சர் செந்தில் பாலாஜியே பேட்டியும் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?

விசாரணை நடைபெறும் இடத்தில் இருந்து முழு ஒத்துழைப்பைத் தந்து வருகிறார். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நிலையில் உடனடியாக இதுபோன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்?. பொதுமேடைகளில் தி.மு.க.வையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துச் சென்றார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. அதற்குத் தகுந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால், இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும்.

ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2016-ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. “தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு - கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது ஒன்றிய அரசு. 

இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது" என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பாஜக உருவாக்கி வருகிறது. பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பாஜக தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News