தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திகைத்துப் போன மாநில அரசும், மத்திய அரசும் ஆலோசனைகளையும் நடத்தின. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லி விரைந்தார். அங்கு பிரதமரைச் சந்தித்தார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை குறித்து பேசினார்.
நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் கூறியதாவது:- உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழக அரசு சட்டரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று அவர் தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு அவசரச் சட்டம் ஓரிரு நாளில் பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தார்.
தற்போது தமிழக அரசு கொண்டுவர இருக்கும் அவசரச்சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட வரைவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் தமிழகத்திற்கு விலக்களிக்க வாய்ப்பு என தெரிகிறது.