முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அவர்கள், அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்!
கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக-வில் தன்னை இணைக்க வற்புறுத்தி போரணி நடத்தினார் முக அழகிரி. எனினும் கட்சி மேலிடம் அவரை திமுக-வில் சேர்க்க முன்வரவில்லை. இதற்கிடையில் அமைச்சர் செல்லூர் ராஜூ முக அழகிரியை பாராட்டி பேசினார்.
எதிரகட்சி குடும்பத்தை சேர்ந்த ஒருவரை செல்லூர் ராஜூ பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையினை கிளப்பியது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அமைச்சரை நேரில் சந்திக்க முக அழகிரி முடிவு செய்தார். இத்தகவல் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலின் படி இன்று காலை 10 மணியளவில் மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு சென்ற முக அழகிரி அவர்கள் ராஜூ அவர்களது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வெளியே வந்த முக அழகிரியிடம் செய்தியாளர்கள் இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு, "தாயாரை இழந்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் கூறுவதற்காகவே வந்தேன். தவிர நீங்கள் எதிர்பார்ப்பது போல வேறு எதுவும் இல்லை" என கூறினார்.
இச்சந்திப்பின் போது அழகிரியுடன் அவரது ஆதரவாளர்கள் கவுஸ்பாட்சா, மன்னன், முபாரக்மந்திரி, சின்னான், கோபிநாதன், உதயகுமார். எம்.எல்.ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்!